Friday, October 26, 2007

மூடப்பட்ட அறைகளுள்
ஏசி ஓடிக் கொண்டிருக்கிறது
மெழுகுதிரியை பத்த வைக்க முனைகிறேன்
தனித்திருக்கையில்
எப்படியெல்லாமோ உயிர்க்கத் தொடங்கிவிடுகிறது
தற்கொலைக்கான முனைப்பு
கடுகளவும் புரிய முடியாத மந்த மனோநிலை
எங்கிருந்தோ வந்துவிடுகிறது.
இருக்கின்ற தனிமையை, வாசிப்பை துளையிடுகிறது
துப்பாக்கி வேட்டுக்களையொத்த மரணத்தின் வாசனை
விளங்கவே முடியாதிருக்கின்ற போதுகளில்
வாசித்த எழுத்தூடாக எழுத்தாளர்கள் சுருக்கிட்டுக் கொள்கிறார்கள்
எங்கோ புரியாத மொழியிடையே வெறுமை நுழைந்து விடுகிறது.
தொலைபேசி அழைப்பில் அலைக்கழியப்பட்டு திசைதெரியாது பயணித்து
இறுதியில் கொலைக்கருவி காது வழியே வெளியேறி
எப்படியோ சாவு நிகழ்ந்து விடுகிறது.

9/29/07

Thursday, September 13, 2007

எட்டுத் திக்கும் வார்த்தைகளால்
அறுக்கின்றது தனிமை
குரலற்ற வெறுமையில் அலைந்து கொண்டிருக்கிறேன்
நண்பா நீ கற்றுத் தந்த தனிமையின் சுரங்கள்
எல்லாம் மறந்து போனேன்
கனவுகளும் தொலைந்து போன
இன்றைய பொழுதில் பாடவும் முடியவில்லை
குரல் எடுத்து கத்தவும் முடியவில்லை
உச்சஸ்தாயிக்கு போகிற குரலின் வனப்பெல்லாம் அழிந்து
வெறும் சத்தம் மட்டுமே எஞ்சியிருக்கிறது.
பாடக் கற்றுத் தந்தவர்கள் யாராவது அழக் கற்றுத் தந்திருக்கலாம்
இன்றைய பொழுதுகள் உயிர்ப்புடன் இருந்திருக்கும்.
தொலைதலின் பாடலைக் கேட்டபடியிருக்கும் குஞ்சுகளே
வாழ்தலின் இனிமைகளையெல்லாம் யாரிடம் அறிவீர்கள்
வாழ்வதற்கான வழிகளற்ற இன்றைய நிலையில்
உங்களுடைய கூடுகளை விட்டு தொலைந்து போங்கள்
வழியில் எங்காவது தங்குவதற்கான வெளிகளைக் கண்டடையுங்கள்
அவை உங்களுக்காக பின்னப்பட்ட வலைகளாகவோ சவப்பெட்டிகளாவோ
இல்லாதிருக்கட்டும்
நீண்ட நெடுங்காலம் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் பூட்டப்பிள்ளைகள் காண
வாழுங்கள்
தானாய் மரணம் வரும் வரை வாழ்தலைத் தவிர வேறு என்ன வேண்டும் உங்களுக்கு.

9/08/07
10:59 PM

Thursday, May 3, 2007

தொலைந்து போகாத
சிறிய ஜாடிகள்
முன் எப்போதோ பரிசளிக்கப்பட்டவை
உடைந்து போகாது பத்திரப்படுத்தி பத்திரப்படுத்தி
நீண்ட நாட்களாய் உயிர்த்திருக்கிறது
நினைவுப் பரிசு
எதன் பொருட்டு
எதன் ஞாபகாரத்தமாய் என்பதெல்லாம் புரியாது
நீண்ட நாட்களாய் இருக்கிறது
யாருடையது என்பதறியாது
யாரும் கோராத சிறிய பரிசுப் பொருள்.
என் பிறப்பிற்க்கு முன்னதான
எனக்குப் பரிச்சயமில்லா யாரோ ஒருவரின்
பரிசை என் வீடு தாங்கிக் கொண்டிருக்கிறது.
எவருக்கோ அளிகக்கப்பட்ட அபரிதமான அன்பை
பாதுகாக்கும் பொறுப்பு என்னுடையது.
எங்கெல்லாமோ வருகிறது
என்னுடையது போல
நிச்சயமற்ற ஏதோ ஒன்றை சுமந்து கொண்டிருக்கிறேன்
எப்போதாவது உரித்துள்ளவரிடம் சேர்ப்பேன் என.
நடுநயமாய் இருந்து கொண்டிருக்கும் சிறிய பொருளை
ஒரு அன்ரிக் பொருளைப் போல பாரத்துக் கொண்டிருக்கிறார்கள்
அதற்கான விலையை தீர்மானித்துக் கொண்டிருக்கிறார்கள்.
யாருடைய எதையோ திருடிய சிறுமியைப் போல
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
என்னுடையதற்றதான பொருளை

1/21/07,11:41 PM

Tuesday, May 1, 2007

எங்கு தொலைந்தது
என்னுடைய பிரியங்கள்
மெல்லிய கம்பளிப் பூச்சியின்
மெதுமையாய் என்னை தடவிப் போகிறது
உன் நினைவு

எது குறித்தும் குறைபடாது
எது குறித்தும் சலிப்படையாது
எந்த எதிர்பார்ப்புமின்றி கடக்கிறது
நாட்கள்

கரகரத்த குரலில் நீ பாடுகிற
பாடலைக் காட்டிலும் இனிமையானதா
நீயற்ற இந்த வசந்தம்

வந்துவிடு சஷி

1/10/07 10:59 PM

சிறுமிக்கு...















1.
இடுப்பைப் பிடித்தபடி தூங்கிப் போகும் சிறுபெண்
என்னுடைய காதலை அது உண்டு பண்ணும் அச்சத்தை
உணர்துகிறது அருகாமை
உனக்கு மட்டுமாய் நான் இல்லாதிருப்பதால்
என் இடைபற்றி தூங்கமுடியாத காலங்களில்
நானும் வருத்தமடைவேன்
என் சிறுபெண்ணின் துயரத்தை எண்ணி
என்னிடையில் நீ வரமுடியாது என்பதாலும்
...

2.
எது குறித்தும் கவலைகள் இன்றி
படர்ந்திருக்கும் கைகள் அந்நியமாயிற்று
நீண்டு உருண்ட கைகள் எனக்கு பழக்கமற்றவை
அந்நியமானவை
இரவில் தனித்து உறங்கும் மெல்லிய
விரல்கள் ஞாபகத்தை எடுக்கிறது
தூக்கதில் விழித்துக் கொண்டு அழுகின்ற
ஆன்மாவை
அணைத்துக் கொள்கிறாய்
ஒரு சிறு குருவியின் ஏக்கம் கலந்த தனிமை
என் கட்டில் விரிப்புக்களை நனைக்கிறது

என் பிரிய குட்டியம்மா
யார் குறித்தான ஏக்கமும் நிலையானதல்ல என்கிற
கற்பிதத்தையே நானும் உன்னிடம் சேர்ப்பிக்கிறேன்
என்னுடைய பரிசாய்....

3.
எது குறித்தும் கவலையற்று
அந்நியமாகிப் போன உன்னை
முத்தமிடுகிறேன்
நீ இன்னும் என்னருகில் இருப்பதாய்
உன் வாசம் நாசியில் இருப்பதாய்
நினைத்துக் கொண்டிருக்கிறேன்
இருவருமாய் தனித்திருக்கும் போது
பெரிய வீதிகளை கடக்க காத்திருக்கும்
இரு சிறுமிகளைப் போல
மெளனம் நீடிக்கிறது
உன்னுடைய பார்வை
இடைவெளிகளை நிரம்பவே முடியாது என்கையில்
உன் முன் குற்றவாளியாய் மண்டுகிறேன்
நீ தான் என்னுடைய இரட்சகி
என்னுடைய பிரிய சாத்தான்
என்னை இரட்சித்து அன்பு செலுத்து
என் பாவங்களையெல்லாம் மறந்து
உன் சிரிப்பால் என்னை ஆசீர் வதி
உன்னுடைய பாரா முகத்தை கொண்டு
என்னுடைய இந்த வாழ்வை வாழமுடியாது-தாயே
எனனை இரட்சித்துக் கொள்...

1/13/07 7:57 PM
நான் ஒரு தேவடியாள் மகள்
முண்டை சிறுக்கி
வேசை
புலால் உண்பவள்
கடவுளாலும் சட்டங்களாலும்
கைவிடப்பட்டவள்
மலட்டு விதவை
யாருக்கும் உகந்தவள்
சாம்பலிலிருந்து துளிர்க்கும்
ஏதோ ஒன்றைப் போல
தவிர்க்க முடியாதவள்

1/13/07 11:10 PM

மெனபோஸ்

1.
மெனபோஸ் பற்றிய யோசித்திராத ஒரு பொழுதில் சாதாரணமாக கடந்து போகிற முத்துலிங்கத்தின் கதையில் அவர் மெனப்போசுக்கான தமிழாய் "முழுவிலக்கு" என்று உபயோகித்திருப்பதை படித்து நண்பிகளுக்கெல்லாம் மெனபோசுக்கான தமிழ் முழுவிலக்கு என்பதாகிவிட்டிருந்தது. அப்போது அது பற்றிய போதிய அறிவற்றிருந்ததால் அதைப்பற்றி ஏதும் யோசிக்கவில்லை ஆனால் அந்தச் சொல்முரண்டிக் கொண்டேயிருந்தது. மாத விலக்கு ஒவ்வொரு மாதமும் தள்ளி வைப்பதென்றால் முழுவிலக்கென்றால் முற்றாக தள்ளிவைப்பதென்பதாகாதா? முதல் சொல் போன்றே பின்னதும் சிக்கலுக்குரியதாகவே பட்டது. முன்னதை மாதப் போக்கு என்று வைத்தால் பின்னது முழுப் போக்கு என்றாகுமா?
2.
இரத்தம் போய்க் கொண்டேயிருக்கிறது. ஒரே வலியாய் இருக்கிறது. எப்ப இந்த சனியன் நிண்டு போகுமோ தெரியேல்லை -என்ற படியிருக்கும் அம்மா வயது பெண்களை கடக்கும் போதெல்லாம் அம்மாவைப் பற்றி நினைப்பதுண்டு.
முதல் முதலாக இரத்தத்தை கண்டு வெருண்டு அம்மாவைக் கட்டி அழுதபோது போலவே இரத்தத்தை காணுகிற ஒவ்வொரு பொழுதும் அம்மாவின் தழுவல் தேவையாய் இருக்கிறது. அது அம்மாவை நினைக்க வைக்கிறது. என்னுடைய அம்மாவுக்கு மெனப்போஸ் வந்திருக்குமா? அம்மா என்ன செய்கிறார் அது அவளை என்ன விதமான துன்பத்தில் தள்ளுகிறது என்கிற பிரிய துயரம் சூழ்ந்து விடுகிறது.

உடலில் ஏற்படுகிற சின்ன மாற்றத்திற்கான காரணங்களும் அம்மாவிடம் இருப்பதாய் அவளை தேடித் திரிகிற காலங்கள் கடந்து அவளிடமிருந்து வெகு தூரம் வந்தாகிவிட்ட போதும், அம்மாவின் மெனப்போஸ் என்னை பாதிக்கிறது. ஒவ்வொரு மாதமும் மாதப்போக்கோடான எனது பரிச்சயம் வலிமிகுந்தபோதும் அது தள்ளிப்போகிற போது எந்த வித காரணமுமின்றி எழுகிற பயம் போல அது கொண்டு வருகிற உணர்வு துயரானது. தினமும் காணுகிற நண்பரைப் போன்று அதன் இன்மை தனிமைப்படுத்துவதுண்டு. அந்த மணத்தை ஒருபோதும் விரும்பாத என்னால் அந்த மணமற்ற அந்த நாட்களை நினைக்க முடியவில்லை. நண்பியொருத்தி சொல்லுவது போல பெண்மையெல்லாம் காய்ந்து போன உணர்வை மெனப்போஸ் கொடுக்குமா? எனக்குள் அந்நியமாகி எங்கெல்லாமோ அலைந்து சோர்கையில் மாதப் போக்கு உண்டாக்குகிற உடல் வலியில் சுருண்டு கிடக்கையில் அம்மா உன்னுடைய மெனப்போஸ் பற்றிய நினைவு என்னுள் கடும் கலவரத்தை உண்டு பண்ணுகிறது. அப்பொழுதில் உன்னுடைய வயித்தில் என் முகம் அழுத்தி உன்னுடைய வலிகளை பகிர விரும்புவேன்.

முன்பொருமுறை சித்தியிடம் பயந்த குரலில் நிறையப் போகுது நின்று விடும் போலிருக்கிறது என்று நீ சொன்னதை எந்த எழுத்திலும் நான் வாசித்ததில்லை. அந்த குரல் பயத்தை ஏற்படுத்தியது. நான் நெருங்கிய போது பேச்சை மாற்றி ஒரொருவரை பார்த்தபடியிருந்த அந்தக் கண்களை நான் ஒரு போதும் பிரிந்ததில்லை. உன்னை உன் வலிகளை ஒரு பெண்ணாக எனினும் என்னால் உணரமுடியாது என்கிறாயா அம்மா?
செயற்கையாய் ஊசி ஏத்தி மாதப் போக்கை உண்டாக்குவார்களாமே என்று நண்பி சொல்லுகிற போது அப்படியா என்ற படியிருந்த போதும் அதைப்பற்றி என்ன என்பது போன்ற என் வயதுக்கு உரிய அலட்சியத்தை கடந்திருப்பதாகவே படுகிறது, அம்மாவைப்பற்றி யோசிக்கும் போதெல்லாம்.

இப்போதெல்லாம் கடவுள் கோயில் பக்தி என்று உன்னுடைய நாட்கள் நகர்கிறது. உன்னுடைய தனிமையை கடவுளும் பக்தியும் குறைப்பிக்கிறதா அல்லது உன்னுடைய பயத்தை இறைமையாய் உணர்கிறாயா? ஏதேதோ நினைத்துக் கொண்டு உன்னிடம் வந்தால் நீ எனக்கு மிக தூரமாகி நிக்கிறாய், எனக்கென்னவோ நேற்றுத்தான் உன் கர்ப்பத்தில் இருந்து பிறந்தது போல இருக்கிறது உன் ஸ்பர்சம்.

2/26/07 7:47 PM

Monday, April 16, 2007

தனிமையின் குரல்

1.
அந்தரங்க வெளியில்
ஊடுருவிக் கிடக்கும்
எழுத்தாளர்களின் குறி
என்னைநோக்கியிருப்பதாய்
விசித்திரமான ஒரு உணர்வு வந்து போகிறது
2.
தெளிவற்ற எழுத்துக்குள் சிக்கலாய்
வெறித்துக் கிடக்கின்ற உன்னை
நான் கண்டடைந்ததாய் நினைத்த போதும்
யாருடனும் பகிர முடியவில்லை.
3.
தெளிந்த நிலையில் இருக்கின்ற எவரையுமே
எனக்கு புரிந்து கொள்ள முடியாது போகிறது
தெளிவானதென்றால் என்ன
சுவடுகளைப் போல எதுவுமே தெளிந்தாய் இருந்ததில்லை
எனக்கு..
4.
சாப்பிட்டு விட்டுப் போ என்கிற அப்பாவை
கடந்து போகிற வெளியில் மறந்து போய்
என்னத்துக்காக கூப்பிட்டார் என்கிற அவஸ்தை வருகிறது
போகிற வெளிகளையெல்லாம் சபித்துக் கொண்டு

5.
யாருடைய வீடு என்பது கேள்வியாய் இருந்ததில்லை
அவளின் எல்லா குணங்களும் நிறைந்த இடம்
பேசுகின்ற ஜடம்
தங்கி விட்டுப் போகின்ற கூடு '
எனக்கு அம்மாவின் இடம்
இப்போது தான் புரிகிறது
அதற்க்கு சொந்தமானவர்களுக்கும்
அது வீடில்லை என்பது

4/10/07.

Thursday, April 12, 2007

போனோகிராபி/Phornography


என்னுடைய காமம் பேசப்படவேண்டியது
என்னுடைய காமம் உணரப் படவேண்டியது
என்னுடைய காமம் புறக்கணிக்கக் கூடாது
என்னுடைய காமத்திலிருந்து தான் உன்னதமான உன்னுடைய காமத்தையும் புரிந்து கொள்ள முடியும்.
இப்படியாக யோசித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய காமத்தை சங்கோசமின்றி பேசவேண்டும் என்பதே காமத்தைப் பற்றிய என்னுடைய மிகப்பலத்த எதிர்பார்ப்பு எனலாம். காமத்தை இழிவான அருவருப்பான மிருகத்தனமான உணர்வாக பார்ப்பவர்கள் அதிகம் பெண்களே. சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட காமம் சமூகத்தின் மரபாத்தமான ஒழுக்க கோட்பாடு தான் என்பதை உணராது ஆண்களின் நிலைப்பாட்டிலிருந்தே காமத்தை பார்க்க முனைகிறார்கள்.
என் வீட்டு ஆண்கள் என்னைக் காண்கையில் அவர்கள் பார்க்கிற நிகழ்சியை மாற்றுவது என்னைத் தொந்தரவு செய்கிறது. பார்க்கிற திரைப்படங்களில் வரும் படுக்கையறை காட்சிகளின் போது அவர்களுக்கு ஏற்படும் அசெளகர்யம் யோசிக்க வைக்கிறது. போனோகிராபி பார்க்கிற ஆண்கள் ஒழுக்கமற்றவர்கள் என்கிற மதரீதியான நிலைப்பாடு பரவலானவர்களிடம் இருக்கிறது. தெருவில் போகிற பெண்களை நக்கலடித்து(நாகரீக சொல்லாடல் துன்புறுத்துதல் பெண் மீதமான வன்முறையே சரியான பதம்) பெண்கள் மீதமான உறுப்புக்களை குறித்தான கெட்ட வார்த்தைகளை உபயோகித்து அல்லது தெருவில் திரிபவர்கள் எல்லோரும் பொதுவானவர்கள் என்கிற ரீதியயில் அவர்களை தொந்தரவு செய்வது. இங்கு எல்லாமே கலைத்துவமாய் செய்ய வேண்டும் மென்மையாய் செய்ய வேண்டும் கவித்துவமாய் இருக்கவேண்டும் இல்லாதவர்கள் கெட்டவர்கள் தான். கிருஸ்ணனுக்காக ராதா கணவனைத் துறந்தால் அது அமரத்துவமடையாத காதல் அதுவே பெண்கள் செய்தால் கள்ளக் காதல். இவ்வகையான முரண்களிலிருந்தே நான் காமத்தை அணுகுகிறேன். அதனூடாக போனோ போன்றவைகளை அவை ஆண்ளுக்கானதாய் மட்டுமே இருப்பதூன அரசியலை உணர்கிறேன். நண்பர்களுடன் பேசும் போதும் ஆண்களுடைய சகோதரர்களுடைய அறைகளுள் நுழையும் போதும் தட்டி விட்டுத் தான் போவதுண்டு அதனூடாக அவர்களும் அதைக் கடைப்பிடிப்பதுண்டு. காரணமாக அவர்களுடைய காமம் சார்ந்த வெளியை அவர்களுடைய அசெளகர்யங்களை தவிர்க்க முனைவதுண்டு. இன்றுவரை நண்பர்கள் போனோ பார்ப்பதை சங்கடமின்றி பகிரும் போது அசுவாசமான ஒரு திருப்தி நிலவுவதுண்டு அப்படியான தருணங்களில் அதை அவர்களடைய நண்பிகள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்கிற சங்கடமும் ஏற்படுவதுண்டு. நடிகையை பார்த்து ஜொள்ளு விடுவது இடுப்பை காட்டுவதை ரசிப்பது என்று அதை ஒரு இரசிக மனதுடன் செய்கிற ஆண்கள் மீதமான மரியாதை போனே பார்ப்பவர்களிடம் வருவதில்லை. முதலாமவர்கள் இரசிகர்கள், இரண்டாமவர்கள் காமுகர்கள. பகுதி பகுதியாக பெண்ணை இரசிக்கிற இரசிகர்களிடம் பெண் உடல் பற்றிய எதிர்பார்ப்புக்கள் காமத்தைப் பற்றிய எதிர்பார்ப்புகள் இருப்பதே இல்லையா?
அல்லது நம் காமத்தை புறக்கணிப்பதூடக, நம் காமத்தில் அருவருப்படைவதனூடாக மற்றவர்களுடைய காமத்தை விமர்சிக்க விழைகிறோமா.
எங்கள் தமிழ் ஆண்களுக்கத் தான் கவர்சிக்கு ஒரு நடிகை காமத்துக்கு ஒரு நடிகை ஜொள்ளு விட ஒரு நடிகை என்று வருடா வருடம் நடிகைகள் மாறிக் கொண்டிருக்கிறார்களே. பெண்கள் என்னவோ தலைமுறையாய் ஒரிரு நடிகர்களையே பாத்துக் கொண்டிருக்கிறார்கள்.
1/13/07

Tuesday, January 30, 2007

சில்லுனு ஒரு காதல்


'காதலன் ஒருவனை கைபிடித்து அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து' என்ற பாரதியாரை கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள், இன்னமும் படங்கள் சொல்லிக் கொண்டிருப்பது காதலனை அவனுக்கு கைகொடுக்கும் காதலிகளை.
'சில்லென்றொரு காதல்' -சராசரியான தமிழ் படம். காதலித்து கலியாணம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறாள் கதாநாயகி ஆனால் அவளது திருமணம் பேச்சுத் திருமணம் ஆனாலும் அவளுடைய வாழ்வு கணவனுடன் சந்தோசமாகப் போகிறது . பேச்சுத் திருமணத்தால் எந்தக் காதலையும் இழக்கவில்லை என்பதை உணர்கிறாள். முழுமையான கணவன், சுட்டியான குழந்தை என்று நிறைவான வாழ்க்கை.
வேலைவிடயமாக கணவன் அமரிக்கா போகிறான். பரணை தட்டிய போது கணவனின் பழைய பொருட்கள் அடங்கிய பெட்டியிலிருந்து அவனுடைய நாட்குறிப்பை எடுத்து வாசிக்கிறாள்-அது அவளுடைய முழுமையான வாழ்க்கையை பிரட்டிப் போடுகிறது. அவன் கல்லூரியில் படித்த போது உருகி உருகி காதலித்த காதல் பெண் ஜஸ்வர்யா. அவள் மீதமான அவனுடை ய உரித்துணர்சி. அவள் மீதமான அவனுடைய ஆதீக்கம்/காதல் போன்ற தீவிர உணற்சியால் திருமண பதிவு அலுவலகத்தில் தாலி கட்டுகிறான் பின் திருமணத்தைப் பதிய விடாமல்அவனை அடித்து அவளை அவனிடமிருந்து பிரித்துப் போய்விடுகிறார்கள். சித்தப்பாவின் கடைசி ஆசையாய் குந்தவியை திருமணம் செய்கிறான். அதுவே முன் கதைச் சுருக்கம்.
அவன் டையரியில் குறிப்பிட்டிருப்பான் ஒரு நாள் அவ கூட வாழ்ந்திருந்தாக் கூட 100 வருசம் வாழ்ந்த திருப்தியோட இருந்திருப்பன் என. இது தான் படத்தோட கைலைற். மனைவி அவனுடைய பழைய காதலியை தேடிப் போய் அவளை வீட்டுக்கு அழைக்கிறாள். அவள் வருகிறாள். முன்னைப் போன்ற பயந்த சுபாவமுள்ளவள் இல்லை இப்போது தைரியசாலி,Australiaயாவில் 7 வருடம் வாழ்ந்தவள்.

மனைவி கணவனிடம் சொல்கிறாள் நான் உன்னைக் காதலிக்கிறேன் உன்னுடைய அந்த ஏக்கத்தை ஒரு நாளாவது வாழ வேண்டும் என்கிற துடிப்பை தன்னால் உணர முடியும் என்றும் அதற்காகவே அவளை அழைத்ததாயும் கூறுகிறாள்.
எனக்கு இந்தப் படத்தை அவனுக்கு பதிலாய் ஏன் அவளினது நிலையிலிருந்து எடுத்திருக்கக் கூடாது என நினைத்தேன். அது வித்தியாசமாகவேனும் இருந்திருக்கும். புதிய, வித்தியாசமான என்பது போன்ற சொற்களை உபயோகிக்க பொருத்தமாயும் இருக்கும். அவள்கள் எந்தக் காதலையும் கடந்திருக்க மாட்டார்களா? அல்லது அவர்களுடைய காதல் எல்லாம் ஆட்டோக்கிராப்பாக இருக்காதா? அப்போ அவைகள் எல்லாம் என்ன கல்வெட்டுக்களா? தாங்கள் நேசித்தவன்களின் பெயர்களை இவர்களுக்கு தெரிய வைக்க முடிகிறதா தாம் பெற்ற பிள்ளைகளுக்கு. ஆனால் இப்படத்தில் மகளின் பெயர் ஜஸ்வர்யா-அவனுடைய காதலியின் பெயர்.

என்னுடைய நண்பர் ஒருவரின் குழந்தை பிறந்தபோது அவர் மனைவி மிகவும் சிரமப்பட்டு மரணம் வரை சென்று மீண்டவர் அவருடைய மகளுடைய பெயர் அவருடைய முன்னாள் காதலியுடையது. எனக்கு அந்தப் பெயரைக் குறிப்பிடும் போதெல்லாம் பெத்த போது அவர் அநுபவித்த மரணவலி தான் நினைவுக்கு வரும். எந்த வலியையும் அநுபவிக்காத ஒருவர் தன்னுடைய நினைவுச் சின்னமாய் அந்த பெயரை வைத்தது அந்த மனைவிக்கு அவர் செய்த மிகப் பெரிய துரோகமாய் தான் படுவதுண்டு.

கடைசியாக தான் தன்னுடைய பழைய வாழ்க்கையை மனைவிக்கு சொல்லாததுக்கு காரணமாய் கெளதம் சொல்கிறான் அதை அவளால் தாங்க முடியாது என்று. தன்னுடைய கணவனின் பழைய வாழ்கை எந்தப் பெண்ணாலும் தாங்க முடியாது அந்தக் கஸ்ரத்தை தான் தன்னுடைய துணைக்கு தர முடியாது என்று நல்லது தான் அப்ப பழைய காதலியின் பெயரை வைத்ததை மட்டும் அவளால் ஏற்றுக் கொள்ள முடியுமா?

எதிர்பாராத எதோ ஒரு பாலத்தடியில் சந்தித்த முன்னாள் காதலரைப் போன்று எதேச்சையாய் சந்தித்து ஆயிரம் கேள்விகளை எழுப்பிப் போகும் ஒரு தருணத்தில் பேசமுடியாத மெளனத்தை உணர்த்துவது போன்ற திரைப்படங்கள் பெண்களால் தான் உருவாக்க முடியும் போலும்.
பார்த்த முதல் நாளே/ஒன்றா ரெண்டா ஆசைகள்/வசீகரா-என்று பாடலில் பெண் உணர்வுகளை நெகிழ்ச்சியை பாசங்கற்று எழுதும் தாமரை போன்று பெண் இயக்குநர்கள் வரவேண்டும். பெண் உணர்வுகளை காதலை, காமத்தை, பிரிவை , உரித்துணர்ச்சியை அவை பெண் மொழியில் பேசவேண்டும்.
சமீபத்திய பெண் இயக்குனர்களில் ரேவதி(மித்ரா my friend, phir milenge) பிரியா(கண்ட நாள் முதல்)போன்றவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவர்கள்.

பி.கு
இதில் கண்டிக்கப்படவேண்டிய மிக முக்கியமான விடயம் திருநங்கைகளை கொச்சை படுத்துவது போன்றதான நச்சுவைக் காட்சிகள். நகைச்சுவையென்றாலே யாரையாவது கிண்டலடிப்பது என்றாகி விட்டது. Action படங்களில் இஸ்லாமியர்களை வில்லன்கள் ஆக்குவது போல (கொலிவூட் படங்களில் கம்யூனிஸ்டுகள் வில்லர்கள்) நகைச்சுவையென்றால் பெண், ஊனமுற்றவர்கள்(அரசியல் ரீதியாக சரியான சொற் பிரயோகம் என்ன?)என்பது போய் இப்போது எல்லாவிதமான சிறுபான்மையினர் மீதமான வக்கிரங்களே நகைச்சுவை என்று வந்து நிக்கிறது. சிறுபான்மையினர் மீதமான வக்கிரங்கள் எந்த வடிவத்தில் வந்தாலும் அவை கண்டிக்க படவேண்டியவையே.
1/8/07

Wednesday, January 10, 2007

The scent of green papaya



சிறுமி மூ, ஒரு வீட்டுக்கு வேலைக்காரியாக போகிறாள். அங்கு வேலைக்காரியாய் அவளுடைய சிறு பிராயம் கழிகிறது.
அவள் வயதொத்த வீட்டின் சிறுவன்கள் அவளை பயமுறுத்திக் கொண்டும் அவள் தோய்த்த ஆடைகளை எடுத்துக் கீழே போட்டும் அவள் வீடு கழுவுகிற வாளிக்குள் சிறுநீர் கழித்தும் அவளுக்கு சிரமம் கொடுக்கிறார்கள்.
மேலே முதிய மாமியாரும்,அந்தக் குடும்பத்தை நடத்துகிற அந்த வீட்டின் மருமகள் - என்றோ செத்துப் போன மகள் நினைவில் மூ மீது அன்பு செலுத்துகிறாள். அங்கு வேலைசெய்யும் வயது முதிர்ந்த வேலைக்காரி மூ வுக்கு பப்பாக் காயில் சமைக்கக் கற்றுக் கொடுக்கிறாள். காயாய் மரத்திலிருந்து பப்பாக் காயை பிடுங்கும் போது விழுகிற பால் முதல் இலை, குழை, வீடு (நாற்சார் வீடு போன்ற ஒரு வீடு) என்று எல்லாமே எமக்கு பழக்கமான ஒரு உணர்வு. துல்லியமான ஒளிப்பதிவு. அடிக்கடி மூவைத் தேடி வந்து மேலே இருக்கும் கிழவியின் நலன் விசாரித்துப் போகும் கிழவன். அவளை ஒரு முறையாவது பார்க்க எப்படியாவது சந்தர்ப்பம் கேட்டு அவளைக் கேட்ட படி. பொறுப்பற்று முன்பொருமுறை காசுடன் வீட்டை விட்டு ஓடிய வீட்டு முதலாளி, எப்போதும் எதோ துக்கத்தில் திரியும் அவருடைய மனைவி.
அந்த வீட்டுக்கு அடிக்கடி வந்து போகும் ஒரு இசைஞன், மூத்த மகனின் நண்பன். அவன்மீது ஈர்ப்பு உண்டாகிறது சிறுமி மூவுக்கு. தகப்பன் திரும்பவும் மனைவியின் காசையெல்லாம் எடுத்துக் கொண்டு ஓடி விடுகிறான். வீட்டில் சிரமமான நிலை. கிழவி மருமகளையே குறை சொல்லுகிறார்.
பத்து வருடங்கள் கழிகிறது மூ இப்போது பெரிய மனுசி. வீட்டுக்கார அம்மா வருத்தமாய் படுத்த படுக்கையில் (கிழவி இருந்த இடத்தில்). வீட்டுக்கு மூத்த மருமகள் அவள் இடத்தில். ஒரு வேலைக்காரி வைக்கிற நிலையில் அவர்கள் இல்லை என்பதால் அவளை அவளுக்கு பிடித்தமான அந்த இசைஞர் வீட்டுக்கு வேலைக்கு அனுப்புகிறார்கள். போகும் போது அந்த அம்மா மகளைப் போல் சீனத்து பாரம்பரிய உடையும் காப்பும் கொடுதத்தனுப்புகிறார்.
ஆரம்பத்தில் அவளைக் கண்டு கொள்ளாத இசைஞன் பின்னர் அவளுடைய வேலைகளால் அவளை உணர்கிறான். அவளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறான் பின்னர் இருவரும் மணக்கின்றனர். திரைப்படம் முடிகிறது.
ஒரு சிறுமியின் வாழ்வு பற்றியதே இந்தப் படம்.
அவள் சிறுமியாய் இருந்த போதே என்னைப் பொறுத்த வரை என்னுடைய கதை முடிந்து விட்டது அதுவும் பெரிய மூவை சிறுமி அளவுக்கு இரசிக்க முடியவில்லை. சிறுமியாய் பூச்சியை எறும்பை இரசிப்பதை ஏற்றுக் கொள்கிற அளவுக்கு வளந்தவளாய் காட்டும் போது ஏதோ பொருந்தாதது போன்ற உணர்வு. பெரிய மூ இயல்பாய் வரவில்லை. பின்னர் அவளுடைய வாழ்வும் அவ்வளவு யதார்த்தமாய் இருக்கவில்லை..

Monday, January 8, 2007

பசி















தீ சுவாலைகளை விழுங்கிய
இரவின் தனிமையில்
பசி உயிரைக் கொல்கிறது
இருண்ட வெளிகளில்
உயிரின் தேவையை மறுத்த படி
ஒலிக்கிறது கடிகாரம்
நீண்ட நேரமாய்
உண்ட படியிருக்கிறேன்
வயிற்றை அடைக்கிறது
பசி
முடிவுறாத பசியை
மறுபடியும் கிளறிக் கொள்கிறது
உணவு
நிரப்பப்படாத சொல்லின் ஆழங்களை
கேட்டறியாத வார்த்தைகளை
மீண்டும் ஒருமுறை
கேட்டுக் கொள்கிறேன்

தொண்டையைத் துளைத்து
உள்ளிடும் வேகத்தை அடக்க
ஆயுதங்களற்று
நிராயுதமாகிறது உடல்
எந்த கம்பிகளாலும் கட்ட இயலாதது
எதனாலும் துளைக்க முடியாதது
வயிறு
கிழித்துப் போடுகிறேன்
உடைந்து சிதறிற்று
தங்க முட்டைகள்
----
நவம்பர்26/2006

பாலியல் சொற்களும் குழந்தைகளும்


முதல்முதலாக இந்த கெட்ட வார்த்தை எப்போது எனக்கு பரிச்சயமானது என்று தெரியவில்லை ஆனால் இந்த கெட்ட வார்த்தைகள் எல்லாம் பெண் உறுப்பு என்கிற புரிதல் காலம் தாழ்த்தியே வந்தது. அது வரை பெரியவர்களால் மறுக்கப்பட்டு மீறிய போது அடி வாங்கிய அந்தச் சொற்கள் கிளுகிளுப்பூட்டுபவையாகவும் மீற சொல்வதாகவுமே இருந்து வந்தன. நான் 6-7 வயதாக இருந்த போது என் வயதொத்த நண்பிகளுடன் சேர்ந்து விளையாடுகிற விளையாட்டுக்கள் பூடகமானவை அவை இந்த சொற்களை உள்நுழைப்பவையாக இருக்கும். அந்த விளையாட்டில் உடம்பில் தெரிகிற உறுப்புகளை ஒருவர் காட்டுவார் அதற்கு மற்றவர்கள் 'டை' சேர்க்க வேண்டும்.
கண் என்று விளையாடுபவள் சொல்வாள் விளையாட்டில் கலந்து கொள்பவள் 'கண்டை" என்பாள் இப்படியே வாய்டை மூக்கு டை என்ற படி கடைசியாக மிக மிக சாதுவாய் முகத்தை வைத்துக் கொண்டு புண்ணைக் காட்டுவாள் விளையாடுபவள் அந்த இடத்துக்கு வரும் போது தான் சொல்ல வருகிற சொல் என்ன என்பதையே மறந்து அந்த சொல்லை சொல்லி விடுவாள் மற்றவள். அவள் கெட்ட வார்த்தை சொன்னதாய் அம்மாட்டை சொல்லப்போறன் என்று பயமுறுத்தியபடியிருப்பாள் விளையாட்டை தொடக்கியவள். இது தான் விளையாட்டு. யாரிந்த விளையாட்டைக் கண்டுபிடித்தார்கள் என்று ஞாபகமில்லை ஆனால் இந்த விளையாட்டு பெண்களாலே விளையாடப்பட்டது ஏன் இந்த விளையாட்டில் ஆண்களை இணைத்துக் கொள்ளவில்லை என்பது இன்று வரை எனக்கு புதிர்.

இந்த வார்த்தைகளை ஆங்கிலத்தில் சொன்ன போது சாதாரணமாய் கடந்து போவதுண்டு ஆனால் தமிழில் சொல்லும் போது பயங்கரக் கோபம் வரும். சாதாரணமாக சொல்லியபடி கடந்து போகும் ஆண்களைக் காண்கையில் இணைந்து நடக்கக் கூட முடிவதில்லை. ஒரு முறை இப்படி தூசணம் பேசுகிற ஒருவனின் தொலைபேசிக்கு அநாமதேயமாய் அழைத்து அவன் உறுப்புக்களை சொல்லி திட்டித் தீத்த பின் தான் கோபம் அடங்கியது ஒரு மாற்றுச் சொல் கிடைத்த சந்தோசத்தில். ஒரு கன்னத்தை அறைந்தால் மறுகன்னத்தில் அறை என்பதற்கிணங்க இவை புழக்கத்தில் வரவேண்டும். தொடர்ச்சியாய் இப்படி செய்யின் இந்தச் சொற்களை உபயோகிக்கிறவர்கள் அதன் அர்த்தத்தை உணரக் கூடும்.