Tuesday, January 30, 2007

சில்லுனு ஒரு காதல்


'காதலன் ஒருவனை கைபிடித்து அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து' என்ற பாரதியாரை கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள், இன்னமும் படங்கள் சொல்லிக் கொண்டிருப்பது காதலனை அவனுக்கு கைகொடுக்கும் காதலிகளை.
'சில்லென்றொரு காதல்' -சராசரியான தமிழ் படம். காதலித்து கலியாணம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறாள் கதாநாயகி ஆனால் அவளது திருமணம் பேச்சுத் திருமணம் ஆனாலும் அவளுடைய வாழ்வு கணவனுடன் சந்தோசமாகப் போகிறது . பேச்சுத் திருமணத்தால் எந்தக் காதலையும் இழக்கவில்லை என்பதை உணர்கிறாள். முழுமையான கணவன், சுட்டியான குழந்தை என்று நிறைவான வாழ்க்கை.
வேலைவிடயமாக கணவன் அமரிக்கா போகிறான். பரணை தட்டிய போது கணவனின் பழைய பொருட்கள் அடங்கிய பெட்டியிலிருந்து அவனுடைய நாட்குறிப்பை எடுத்து வாசிக்கிறாள்-அது அவளுடைய முழுமையான வாழ்க்கையை பிரட்டிப் போடுகிறது. அவன் கல்லூரியில் படித்த போது உருகி உருகி காதலித்த காதல் பெண் ஜஸ்வர்யா. அவள் மீதமான அவனுடை ய உரித்துணர்சி. அவள் மீதமான அவனுடைய ஆதீக்கம்/காதல் போன்ற தீவிர உணற்சியால் திருமண பதிவு அலுவலகத்தில் தாலி கட்டுகிறான் பின் திருமணத்தைப் பதிய விடாமல்அவனை அடித்து அவளை அவனிடமிருந்து பிரித்துப் போய்விடுகிறார்கள். சித்தப்பாவின் கடைசி ஆசையாய் குந்தவியை திருமணம் செய்கிறான். அதுவே முன் கதைச் சுருக்கம்.
அவன் டையரியில் குறிப்பிட்டிருப்பான் ஒரு நாள் அவ கூட வாழ்ந்திருந்தாக் கூட 100 வருசம் வாழ்ந்த திருப்தியோட இருந்திருப்பன் என. இது தான் படத்தோட கைலைற். மனைவி அவனுடைய பழைய காதலியை தேடிப் போய் அவளை வீட்டுக்கு அழைக்கிறாள். அவள் வருகிறாள். முன்னைப் போன்ற பயந்த சுபாவமுள்ளவள் இல்லை இப்போது தைரியசாலி,Australiaயாவில் 7 வருடம் வாழ்ந்தவள்.

மனைவி கணவனிடம் சொல்கிறாள் நான் உன்னைக் காதலிக்கிறேன் உன்னுடைய அந்த ஏக்கத்தை ஒரு நாளாவது வாழ வேண்டும் என்கிற துடிப்பை தன்னால் உணர முடியும் என்றும் அதற்காகவே அவளை அழைத்ததாயும் கூறுகிறாள்.
எனக்கு இந்தப் படத்தை அவனுக்கு பதிலாய் ஏன் அவளினது நிலையிலிருந்து எடுத்திருக்கக் கூடாது என நினைத்தேன். அது வித்தியாசமாகவேனும் இருந்திருக்கும். புதிய, வித்தியாசமான என்பது போன்ற சொற்களை உபயோகிக்க பொருத்தமாயும் இருக்கும். அவள்கள் எந்தக் காதலையும் கடந்திருக்க மாட்டார்களா? அல்லது அவர்களுடைய காதல் எல்லாம் ஆட்டோக்கிராப்பாக இருக்காதா? அப்போ அவைகள் எல்லாம் என்ன கல்வெட்டுக்களா? தாங்கள் நேசித்தவன்களின் பெயர்களை இவர்களுக்கு தெரிய வைக்க முடிகிறதா தாம் பெற்ற பிள்ளைகளுக்கு. ஆனால் இப்படத்தில் மகளின் பெயர் ஜஸ்வர்யா-அவனுடைய காதலியின் பெயர்.

என்னுடைய நண்பர் ஒருவரின் குழந்தை பிறந்தபோது அவர் மனைவி மிகவும் சிரமப்பட்டு மரணம் வரை சென்று மீண்டவர் அவருடைய மகளுடைய பெயர் அவருடைய முன்னாள் காதலியுடையது. எனக்கு அந்தப் பெயரைக் குறிப்பிடும் போதெல்லாம் பெத்த போது அவர் அநுபவித்த மரணவலி தான் நினைவுக்கு வரும். எந்த வலியையும் அநுபவிக்காத ஒருவர் தன்னுடைய நினைவுச் சின்னமாய் அந்த பெயரை வைத்தது அந்த மனைவிக்கு அவர் செய்த மிகப் பெரிய துரோகமாய் தான் படுவதுண்டு.

கடைசியாக தான் தன்னுடைய பழைய வாழ்க்கையை மனைவிக்கு சொல்லாததுக்கு காரணமாய் கெளதம் சொல்கிறான் அதை அவளால் தாங்க முடியாது என்று. தன்னுடைய கணவனின் பழைய வாழ்கை எந்தப் பெண்ணாலும் தாங்க முடியாது அந்தக் கஸ்ரத்தை தான் தன்னுடைய துணைக்கு தர முடியாது என்று நல்லது தான் அப்ப பழைய காதலியின் பெயரை வைத்ததை மட்டும் அவளால் ஏற்றுக் கொள்ள முடியுமா?

எதிர்பாராத எதோ ஒரு பாலத்தடியில் சந்தித்த முன்னாள் காதலரைப் போன்று எதேச்சையாய் சந்தித்து ஆயிரம் கேள்விகளை எழுப்பிப் போகும் ஒரு தருணத்தில் பேசமுடியாத மெளனத்தை உணர்த்துவது போன்ற திரைப்படங்கள் பெண்களால் தான் உருவாக்க முடியும் போலும்.
பார்த்த முதல் நாளே/ஒன்றா ரெண்டா ஆசைகள்/வசீகரா-என்று பாடலில் பெண் உணர்வுகளை நெகிழ்ச்சியை பாசங்கற்று எழுதும் தாமரை போன்று பெண் இயக்குநர்கள் வரவேண்டும். பெண் உணர்வுகளை காதலை, காமத்தை, பிரிவை , உரித்துணர்ச்சியை அவை பெண் மொழியில் பேசவேண்டும்.
சமீபத்திய பெண் இயக்குனர்களில் ரேவதி(மித்ரா my friend, phir milenge) பிரியா(கண்ட நாள் முதல்)போன்றவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவர்கள்.

பி.கு
இதில் கண்டிக்கப்படவேண்டிய மிக முக்கியமான விடயம் திருநங்கைகளை கொச்சை படுத்துவது போன்றதான நச்சுவைக் காட்சிகள். நகைச்சுவையென்றாலே யாரையாவது கிண்டலடிப்பது என்றாகி விட்டது. Action படங்களில் இஸ்லாமியர்களை வில்லன்கள் ஆக்குவது போல (கொலிவூட் படங்களில் கம்யூனிஸ்டுகள் வில்லர்கள்) நகைச்சுவையென்றால் பெண், ஊனமுற்றவர்கள்(அரசியல் ரீதியாக சரியான சொற் பிரயோகம் என்ன?)என்பது போய் இப்போது எல்லாவிதமான சிறுபான்மையினர் மீதமான வக்கிரங்களே நகைச்சுவை என்று வந்து நிக்கிறது. சிறுபான்மையினர் மீதமான வக்கிரங்கள் எந்த வடிவத்தில் வந்தாலும் அவை கண்டிக்க படவேண்டியவையே.
1/8/07

Wednesday, January 10, 2007

The scent of green papaya



சிறுமி மூ, ஒரு வீட்டுக்கு வேலைக்காரியாக போகிறாள். அங்கு வேலைக்காரியாய் அவளுடைய சிறு பிராயம் கழிகிறது.
அவள் வயதொத்த வீட்டின் சிறுவன்கள் அவளை பயமுறுத்திக் கொண்டும் அவள் தோய்த்த ஆடைகளை எடுத்துக் கீழே போட்டும் அவள் வீடு கழுவுகிற வாளிக்குள் சிறுநீர் கழித்தும் அவளுக்கு சிரமம் கொடுக்கிறார்கள்.
மேலே முதிய மாமியாரும்,அந்தக் குடும்பத்தை நடத்துகிற அந்த வீட்டின் மருமகள் - என்றோ செத்துப் போன மகள் நினைவில் மூ மீது அன்பு செலுத்துகிறாள். அங்கு வேலைசெய்யும் வயது முதிர்ந்த வேலைக்காரி மூ வுக்கு பப்பாக் காயில் சமைக்கக் கற்றுக் கொடுக்கிறாள். காயாய் மரத்திலிருந்து பப்பாக் காயை பிடுங்கும் போது விழுகிற பால் முதல் இலை, குழை, வீடு (நாற்சார் வீடு போன்ற ஒரு வீடு) என்று எல்லாமே எமக்கு பழக்கமான ஒரு உணர்வு. துல்லியமான ஒளிப்பதிவு. அடிக்கடி மூவைத் தேடி வந்து மேலே இருக்கும் கிழவியின் நலன் விசாரித்துப் போகும் கிழவன். அவளை ஒரு முறையாவது பார்க்க எப்படியாவது சந்தர்ப்பம் கேட்டு அவளைக் கேட்ட படி. பொறுப்பற்று முன்பொருமுறை காசுடன் வீட்டை விட்டு ஓடிய வீட்டு முதலாளி, எப்போதும் எதோ துக்கத்தில் திரியும் அவருடைய மனைவி.
அந்த வீட்டுக்கு அடிக்கடி வந்து போகும் ஒரு இசைஞன், மூத்த மகனின் நண்பன். அவன்மீது ஈர்ப்பு உண்டாகிறது சிறுமி மூவுக்கு. தகப்பன் திரும்பவும் மனைவியின் காசையெல்லாம் எடுத்துக் கொண்டு ஓடி விடுகிறான். வீட்டில் சிரமமான நிலை. கிழவி மருமகளையே குறை சொல்லுகிறார்.
பத்து வருடங்கள் கழிகிறது மூ இப்போது பெரிய மனுசி. வீட்டுக்கார அம்மா வருத்தமாய் படுத்த படுக்கையில் (கிழவி இருந்த இடத்தில்). வீட்டுக்கு மூத்த மருமகள் அவள் இடத்தில். ஒரு வேலைக்காரி வைக்கிற நிலையில் அவர்கள் இல்லை என்பதால் அவளை அவளுக்கு பிடித்தமான அந்த இசைஞர் வீட்டுக்கு வேலைக்கு அனுப்புகிறார்கள். போகும் போது அந்த அம்மா மகளைப் போல் சீனத்து பாரம்பரிய உடையும் காப்பும் கொடுதத்தனுப்புகிறார்.
ஆரம்பத்தில் அவளைக் கண்டு கொள்ளாத இசைஞன் பின்னர் அவளுடைய வேலைகளால் அவளை உணர்கிறான். அவளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறான் பின்னர் இருவரும் மணக்கின்றனர். திரைப்படம் முடிகிறது.
ஒரு சிறுமியின் வாழ்வு பற்றியதே இந்தப் படம்.
அவள் சிறுமியாய் இருந்த போதே என்னைப் பொறுத்த வரை என்னுடைய கதை முடிந்து விட்டது அதுவும் பெரிய மூவை சிறுமி அளவுக்கு இரசிக்க முடியவில்லை. சிறுமியாய் பூச்சியை எறும்பை இரசிப்பதை ஏற்றுக் கொள்கிற அளவுக்கு வளந்தவளாய் காட்டும் போது ஏதோ பொருந்தாதது போன்ற உணர்வு. பெரிய மூ இயல்பாய் வரவில்லை. பின்னர் அவளுடைய வாழ்வும் அவ்வளவு யதார்த்தமாய் இருக்கவில்லை..

Monday, January 8, 2007

பசி















தீ சுவாலைகளை விழுங்கிய
இரவின் தனிமையில்
பசி உயிரைக் கொல்கிறது
இருண்ட வெளிகளில்
உயிரின் தேவையை மறுத்த படி
ஒலிக்கிறது கடிகாரம்
நீண்ட நேரமாய்
உண்ட படியிருக்கிறேன்
வயிற்றை அடைக்கிறது
பசி
முடிவுறாத பசியை
மறுபடியும் கிளறிக் கொள்கிறது
உணவு
நிரப்பப்படாத சொல்லின் ஆழங்களை
கேட்டறியாத வார்த்தைகளை
மீண்டும் ஒருமுறை
கேட்டுக் கொள்கிறேன்

தொண்டையைத் துளைத்து
உள்ளிடும் வேகத்தை அடக்க
ஆயுதங்களற்று
நிராயுதமாகிறது உடல்
எந்த கம்பிகளாலும் கட்ட இயலாதது
எதனாலும் துளைக்க முடியாதது
வயிறு
கிழித்துப் போடுகிறேன்
உடைந்து சிதறிற்று
தங்க முட்டைகள்
----
நவம்பர்26/2006

பாலியல் சொற்களும் குழந்தைகளும்


முதல்முதலாக இந்த கெட்ட வார்த்தை எப்போது எனக்கு பரிச்சயமானது என்று தெரியவில்லை ஆனால் இந்த கெட்ட வார்த்தைகள் எல்லாம் பெண் உறுப்பு என்கிற புரிதல் காலம் தாழ்த்தியே வந்தது. அது வரை பெரியவர்களால் மறுக்கப்பட்டு மீறிய போது அடி வாங்கிய அந்தச் சொற்கள் கிளுகிளுப்பூட்டுபவையாகவும் மீற சொல்வதாகவுமே இருந்து வந்தன. நான் 6-7 வயதாக இருந்த போது என் வயதொத்த நண்பிகளுடன் சேர்ந்து விளையாடுகிற விளையாட்டுக்கள் பூடகமானவை அவை இந்த சொற்களை உள்நுழைப்பவையாக இருக்கும். அந்த விளையாட்டில் உடம்பில் தெரிகிற உறுப்புகளை ஒருவர் காட்டுவார் அதற்கு மற்றவர்கள் 'டை' சேர்க்க வேண்டும்.
கண் என்று விளையாடுபவள் சொல்வாள் விளையாட்டில் கலந்து கொள்பவள் 'கண்டை" என்பாள் இப்படியே வாய்டை மூக்கு டை என்ற படி கடைசியாக மிக மிக சாதுவாய் முகத்தை வைத்துக் கொண்டு புண்ணைக் காட்டுவாள் விளையாடுபவள் அந்த இடத்துக்கு வரும் போது தான் சொல்ல வருகிற சொல் என்ன என்பதையே மறந்து அந்த சொல்லை சொல்லி விடுவாள் மற்றவள். அவள் கெட்ட வார்த்தை சொன்னதாய் அம்மாட்டை சொல்லப்போறன் என்று பயமுறுத்தியபடியிருப்பாள் விளையாட்டை தொடக்கியவள். இது தான் விளையாட்டு. யாரிந்த விளையாட்டைக் கண்டுபிடித்தார்கள் என்று ஞாபகமில்லை ஆனால் இந்த விளையாட்டு பெண்களாலே விளையாடப்பட்டது ஏன் இந்த விளையாட்டில் ஆண்களை இணைத்துக் கொள்ளவில்லை என்பது இன்று வரை எனக்கு புதிர்.

இந்த வார்த்தைகளை ஆங்கிலத்தில் சொன்ன போது சாதாரணமாய் கடந்து போவதுண்டு ஆனால் தமிழில் சொல்லும் போது பயங்கரக் கோபம் வரும். சாதாரணமாக சொல்லியபடி கடந்து போகும் ஆண்களைக் காண்கையில் இணைந்து நடக்கக் கூட முடிவதில்லை. ஒரு முறை இப்படி தூசணம் பேசுகிற ஒருவனின் தொலைபேசிக்கு அநாமதேயமாய் அழைத்து அவன் உறுப்புக்களை சொல்லி திட்டித் தீத்த பின் தான் கோபம் அடங்கியது ஒரு மாற்றுச் சொல் கிடைத்த சந்தோசத்தில். ஒரு கன்னத்தை அறைந்தால் மறுகன்னத்தில் அறை என்பதற்கிணங்க இவை புழக்கத்தில் வரவேண்டும். தொடர்ச்சியாய் இப்படி செய்யின் இந்தச் சொற்களை உபயோகிக்கிறவர்கள் அதன் அர்த்தத்தை உணரக் கூடும்.