Monday, September 8, 2008

எத்தனையாவது பக்கம்
என்பதறியாது தேடிக் கொண்டிருக்கிறேன்
குசினிக்குள் அலைந்து கொண்டிருக்கும்
அம்மாவின் நாளை
சமையல் எடுத்துக் கொள்கிறது
உப்புச் சுவை குறையாத சாப்பாட்டை
ஒரே மரக்கறிகளுடன் சலிக்காது படைக்கின்ற
அம்மாவின் நேர்த்தி என்னிடம் இருந்ததில்லை
மரக்கறிகளை பெரிதாயும்
நிறக்கலவைகளை மாற்றியும்
தோசையை ரொட்டியாயும்
என்னுடைய எதுவுமே அதன் வடிவத்தை
அடைந்ததில்லை.....
நிமிடத்தில் சமைத்துவிடும் வல்லமை படைத்தவர்கள்
நாளை தின்னும் சமையலை விமர்சித்துக் கொள்ளுவார்கள்.
தலைமுறைகளின் உழைப்பைத் திருடி
சதுர பாத்திரத்துள்
மிதந்தபடியிருக்கும் காய்கறிகளின் ஒழுங்கீனத்தைப் பார்த்து
கற்றுக் கொடுத்தல்களை ஒப்புவிக்க தெரியாத மாணவியாய்
முழித்துக் கொண்டிருக்கிறேன்

இலகுவில் குசினியை கடக்க முடிந்ததில்லை
பாத்திரங்கள், குப்பை, தண்ணீர்
நாலாபக்கமும்
சிதறப்பட்ட ஒழுங்கீனங்களை ஒதுக்க முடிந்தால்
நிமிடத்தில் தயாராகிவிடக் கூடும் சாப்பாடும்
வாழ்க்கையைப் போலவே.....
`````
april28, 2008 2:55pm