Monday, September 8, 2008

எத்தனையாவது பக்கம்
என்பதறியாது தேடிக் கொண்டிருக்கிறேன்
குசினிக்குள் அலைந்து கொண்டிருக்கும்
அம்மாவின் நாளை
சமையல் எடுத்துக் கொள்கிறது
உப்புச் சுவை குறையாத சாப்பாட்டை
ஒரே மரக்கறிகளுடன் சலிக்காது படைக்கின்ற
அம்மாவின் நேர்த்தி என்னிடம் இருந்ததில்லை
மரக்கறிகளை பெரிதாயும்
நிறக்கலவைகளை மாற்றியும்
தோசையை ரொட்டியாயும்
என்னுடைய எதுவுமே அதன் வடிவத்தை
அடைந்ததில்லை.....
நிமிடத்தில் சமைத்துவிடும் வல்லமை படைத்தவர்கள்
நாளை தின்னும் சமையலை விமர்சித்துக் கொள்ளுவார்கள்.
தலைமுறைகளின் உழைப்பைத் திருடி
சதுர பாத்திரத்துள்
மிதந்தபடியிருக்கும் காய்கறிகளின் ஒழுங்கீனத்தைப் பார்த்து
கற்றுக் கொடுத்தல்களை ஒப்புவிக்க தெரியாத மாணவியாய்
முழித்துக் கொண்டிருக்கிறேன்

இலகுவில் குசினியை கடக்க முடிந்ததில்லை
பாத்திரங்கள், குப்பை, தண்ணீர்
நாலாபக்கமும்
சிதறப்பட்ட ஒழுங்கீனங்களை ஒதுக்க முடிந்தால்
நிமிடத்தில் தயாராகிவிடக் கூடும் சாப்பாடும்
வாழ்க்கையைப் போலவே.....
`````
april28, 2008 2:55pm

Thursday, April 24, 2008

காமத்தைப் பேசுதல்...




எனது உடல் பாவத்துக்குரியது
நீங்கள் புனிதமாய் சொல்லுகின்ற
எல்லாவற்றையும் நிராகரிப்பது
உங்கள் மொழியில் நான் பெண்ணுக்குரிய
குணாம்சங்களைத் துறந்திருந்தேன்
இதை எழுதுவதூடாக நான் பெண் என்பதையே
துறக்க முனைகிறேன். என்னூடாக நான் கடந்தவள்களின், என்னுடைய உடலைப் பற்றிப் பேச முனைகிறேன். அது யாரைப்பற்றிப் பேசிய போதும் அதிலிருக்கின்ற எல்லா உணர்வும் எல்லா வலியும் என்னுடையதாகவே ஆகிவிடுகிறது.

முதல் முதலாக ஓரு ஆண் முத்தமிட்ட போது எழுகின்ற உடல் சார்ந்த புனிதம் சார்ந்த அச்சத்தைப் போல உடல் பற்றிப் பேசும் போதெல்லாம் நல்ல உடல் - புனிதமான உடல் போன்ற பிரயோகங்களும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு முறை பிரியமான பெண் ஒருத்தி சிறுமியாய் தன்னுள் திணிக்கப்பட்ட குறியைப் பற்றி அதன் அருவருப்புணர்வு பற்றிக் சொல்லிக் கொண்டிருந்தவள் உடைந்து போய் தன்னை ஒருவருக்கும் பிடிப்பதில்லை ஏனெனில் நான் சுத்தமற்றவள் என்றாள். அன்று அவளுடைய அழுகையை விடவும் வதையானதாய் என்னை தொடர்ந்து கொண்டே இருந்த வசனம் அழுக்கானவள் என்கின்ற அவளுடைய துயரமே. தினமும் நீ நல்ல பிள்ளையல்லா என்று சொல்லிச் சொல்லித் திணிக்கப்பட்ட புனிதங்கள் சாக்காடையாய் உள்ளே ஓடிக் கொண்டிருக்கிறது. ஆறு வயதில் தான் என்கின்ற எந்த தனித்துவமுமற்ற ஒரு சிறுமியிடம் திணிக்கப்படுகின்ற குறி பாவங்களைச் சுமக்கவில்லை, சிறுமியாய் அதிகாரத்துக்கு முன்னால் அடங்கிப் போன குழந்தை அழுக்கானவளாய் வளர்ந்து நிக்கிறாள். அறிவும் அன்பும் நிறைந்த அந்தக் குழந்தையிடமிருந்து பறிக்கப்பட்டது குழந்தைமையும் உடல் பற்றிய ஆசைகளும் மட்டும் தானா? அவளிடம் இருந்து திருடப் பட்டது தன்னம்பிக்கையும், மற்றவர்களிடம் இப்படி ஒன்று எனக்கு நடந்தது என்று பகிர்வதற்கான வெளியும் தான். என் பிரியத்துக்குரிய அவளைப் போல தனக்கு மட்டும் தான் இது நடந்தது ஏனெனின் தான் நல்ல பிள்ளை இல்லை என நம்புகிற அவளைப் போல குழந்தைகளிடம் ஏதோ ஒரு போதில் இதை ஒருமுறையாவது எல்லாப் பெண்களும் எதிர்கொண்டிருப்பார்கள் என்று பகிர தடையாய் இருப்பது என்ன? புனிதமான உடல் என்கின்ற கட்டமைப்பா? தன்னுடைய பெண் உடலுள் இருக்கின்ற அந்த புனித புள்ளியை தைக்க முடியாதா அல்லது ஆண் குறியை வெட்டி தட்டையாக்கினால் என்ன என்கின்ற குழந்தையிடம் உன்னுடைய உடல், உனக்கான காமம் என்கின்ற புள்ளிகளை உருவாக்கி கொடுப்பதற்கான வெளிகளை அடைத்து வைத்திருப்பது எது. இந்தப் புள்ளியிலிருந்து தான் The vagina monologues என்கின்ற படைப்பு முக்கியமாய்ப் படுகிறது. உலகெங்கும் பயணம் செய்து பெண்களிடம் தமது பெண் குறியைப் பற்றி பேச வைத்திருக்கின்றார். தன் உடலின் முக்கியமான உறுப்பொன்றைப் பற்றி முதல் முதலாய் உணர்ந்தவர்கள் போல பேச ஆரம்பிக்கிறார்கள். புதர்களுள்ளிருக்கின்ற ஒன்றை கண்டடைகின்ற மகிழ்வுடன் தமது உறுப்பைப் பற்றிய அவர்களுடைய கண்டடைதல்கள் எல்லாப் பெண்களுக்கும் பொதுவானவை. தன்னுடைய பாலுறுப்பைக் கண்டடைவதூடாக தமது காமத்தைக் கண்டடைகின்றார்கள். பொதுவாக காமம் என்பது ஆண்களுக்கானது இது பெண்களைப் பற்றி அவர்களுடைய விருப்பு வெறுப்பைப் பற்றிப் பேசுவதில்லை. தெருவில் நிக்கின்ற ஆண்களை யாரும் புணர்தலுக்கான உயிரியாய்ப் பார்ப்பதில்லை. ஒருமுறை நண்பர் ஒருவர் தன்னுடைய நண்பனில் ஒருவன் சரஸ்வதி பக்தன், சரஸ்வதியே அவனுடைய ------ என்று சொன்ன போதும், இன்று காமத்தைப் பற்றி தேடிவருகின்ற குறிச்சொற்களை கணனியில் பார்க்கின்ற போதும்
அம்மா அக்கா தங்கை அண்ணி என்கின்ற புனித புள்ளிகளை போற்றிப் பாதுகாக்கின்ற அதேவேளை, மறைமுகமாய், அவர்களைப் பற்றிய காமக் கதைகளை வாசிப்பது என்கின்ற அடுத்த புள்ளியைப் பார்க்கையில் புனிதமாய் வைத்திருக்கின்ற இந்த உறவு நிலைகள் ஆச்சர்யப்படுத்துகிறது. இதனூடாக புனிதமாய் கட்டிவைத்திருக்கின்ற எல்லாவற்றையும் உரித்துப் பாக்கின்ற மனோநிலையும் வளர்கின்றதில்லையா?
ஒரு முறை ஊருக்குப் போயிருந்த போது நான் பிறந்த வளர்ந்த தெருவில் பஸ்சில் பிரயாணம் செய்த போது ஒரு தாய் குழுந்தைக்கு துணியால் மூடியபடி பால் கொடுத்துக் கொண்டிருந்தார். பின்னர் அவர் தூங்கியிருந்தார். அந்த துணி நழுவியிருந்தது குழந்தை பால் குடித்துக் கொண்டிருந்தது. நான் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தேன். நின்றவர்கள் யாவரும் ஆண்களாய் இருந்ததால் மூடுவதா விடுவதா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். என் கைகள் துணியை எடுத்து கொடுக்கும் கதாநாயகன் போல உணர்சிவசப்பட்டது; கடைசியில் அப்படியே விட்டு விடுவது என்று விட்டுவிட்டேன். குழந்தைக்கு பால் ஊட்டுவது கூட ஒரு ஆணைத் தூண்டுகின்ற விடயமாய் மறைக்க வேண்டியதாய் எனக்குப் படவில்லை. மேலைத்தேய நாடுகளில் வாழ ஆரம்பித்த பிற்பாடு பஸ் இருக்கைகளுக்கு மேலே "பொதுவில் பெண்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுதல் குற்றமல்ல" என்கிற சொற் தொடர்களைப் பார்க்கின்ற போது அப்படி பொது இடத்தில் குழந்தைக்கு பால் கொடுக்கின்ற நிலை வரவேண்டும் என்று தான் தோன்றுகிறது. இன்னொருமுறை தன்னுடைய மனைவியைப் பற்றி சொல்லிய நண்பரின் நண்பர் அவள் எல்லாவற்றையும் விளங்கிக் கொண்டவள் எல்லாவற்றையும் பேசுகிற பெண் என்று நினைத்திருந்தேன் ஆனால் அவளால் வெளிச்சத்தில் உடலுறவு கொள்ள முடியவில்லை என்று சொன்ன போது மிகவும் சங்கடமாய் இருந்தது. பேசுகின்ற பெண்கள் உடல்சார்ந்து வெளிப்படையாய் இருப்பார்கள் என்கின்ற இவர்களுடைய நினைப்பும் அவர்களைப் பற்றி விளங்காத பேச்சும் அதை அவளற்ற வெளிகளில் பேசி தண்ணியடித்தலை சுவாரசியம் ஆக்குவதும் பெண் உடல் பற்றி எவ்வகையான புரிதலைக் கொண்டு வரும்? ஆண்கள் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவளுடைய கூச்சம் அவளுடையது மட்டுமானதா? பெண்கள் தன்னுடைய உடலை நிர்வாணமாய் எத்தனை தடவை பார்ப்பார்கள் என்பதே புதிரான விடயம் (குளிக்கின்ற போது தவிர்த்து). நிமிடத்துக்கு நிமிடம் புண்டை என்று சொல்லுகின்ற நண்பர்கள் ஒரு முறை நாங்கள் ஏய் கொட்டை உன்ரை உறுப்பைச் சொல்லிக் கதையன் என்ற போது முகத்தில் தென்பட்ட அதிர்ச்சியிலிருந்து அவர்கள் காலத்துக்கும் மீள மாட்டார்கள் என்று தோன்றியது. என்னுடைய சிறு நண்பிகளிடம் சொல்லிக் கொடுப்பதும் அது தான். உன்னுடைய எந்த உறுப்பும் கெட்ட வார்த்தை கிடையாது அதை கெட்ட வார்த்தையாய் சொல்லுகின்ற போது நீ அவர்களுடையதை சொல்லு அது தான் உன்னுடைய ஆயுதம்.
ஒரு முறை சகோதரனுடன் பயணித்த போது ஒரு ஆண் எங்களுடன் கதைக்க வெளிக்கிட்ட போது அவன் கையை நீட்டி விட்டான் அன்று அவர் கற்றுக் கொண்டது எம்மிடமிருந்து, எமக்கான எதிர்ப்பை அல்லது விருப்பத்தை நாங்கள் பார்த்துக் கொள்வோம் நீ எமக்காய் யாருடனும் சண்டை போட வேண்டியதில்லை. நாங்கள் கேட்டோம் என்றால் வா நண்பனோ, காதலனோ, கணவனோ அந்த எவனோ எங்களுக்காக யாருடனும் சண்டை போடவேண்டியதில்லை ஏனெனில் நாங்கள் எங்களை பாதுகாக்கத் தெரிந்தவர்களாய் வளர்ந்திருந்தோம். அப்படியாக வளர்வதற்கான சுதந்திரத்தை வெளிகளை உருவாக்குவதே உதவுதலின் முக்கிய புள்ளியாய் இருக்கும். அதைவிடுத்து யாருக்காகவும் யாருடைய ஆசைகளையும் விளங்காது சண்டை பிடித்தலும் உடலைப் பற்றிப் பேசாது விட்டு என்னுடைய மனைவிக்கு உடலுறவில் விருப்பமில்லை என்ன செய்தாலும் பேசாம இருக்குது என்பதும் இன்னும் இன்னும் பெண் பற்றிய புரிதலின்மையையே காட்டுகிறது. பெண்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினால் ஆண்கள் எல்லாம் தெரிந்தவர்களாய் நினைத்து விடுவார்கள் என நினைத்தும் மெளனமாய் இருக்கலாம் ஆகவே நம்மைப்பற்றி நம் உடலைப் பற்றி உணர்வுகளைப்பற்றி விருப்பங்களைப் பற்றிப் பேசிக் கொள்ளுவோம்; எந்த முன் அனுமானங்களுமின்றி பேச்சினூடே ஒரொருவரை புரிந்து கொள்ளுவோம்; அதிலிருந்து தான் பெண்ணின் காமத்தை அதனூடாக ஆண்-பெண் வெளிப்பாடுகளை உணர முடியும்.

2/15/08 -4:50 PM

Tuesday, February 19, 2008

தேனீர் காலியாகிக் கொண்டிருக்கிறது
சிரித்துக் கொண்டும் விவாதித்துக் கொண்டும்
காலியாக்கிக் கொண்டிருக்கிறோம்
தாண்டமுடியாத கண்டங்களை
விடைபெற விரும்பாத கணங்களை
அர்த்தமற்றதான காத்திருப்புக்களை
தேனீரோடு கடந்துகொண்டிருக்கிறோம்
ஏதோ ஒரு காலடியோசை
தொலைபேசி அழைப்பு
வாகனத்தின் இரைச்சல்
இப்படி ஏதாவது ஒன்று
இலகுவில் நுழைந்து விடுகிறது
நமக்கிடையே நிகழ்ந்து கொண்டிருக்கும்
உரையாடல்களுள்
நீண்ட நெடும் பெருமூச்சுக்களை
பிரம்மாண்டமான பெரும் இடைவெளிகளை
சம்பாசணையில் தொலைத்துவிட முயலும்
இந்த உரையாடல்கள்
தேநீரோடு காலியாகி விடுகிறது
மீண்டும் இடைவெளி சூழ்ந்துவிடு்கிறது.
பத்திரிகையில் ஒரு கண்ணும்
தொலைபேசியில் மறு கண்ணும்
சாளரத்தில் ஒன்றென்று
உடலெங்கும் பரவிப் படர்கின்றன
பல கண்கள்
எம்மை மீட்கும் ஒரு பொழுதிற்காய்
காத்திருக்கும் பல கண்கள்
தன்னை கண்டடைய முயலும் ஓர் ஆன்மா
நாலா பக்கமும் கற்குகைகளாய்
சந்தடிமிகு இரைச்சல்களுள்
தனக்கே உரியதான உலகை வேண்டி
தவம் இருக்கிறது
விடுபட விரும்பும்
எல்லா சங்கிலிகளில் இருந்தும்
இறுக்கமான ஒரு கயிறு அழுத்திக் கொண்டிருக்கிறது
விடுபட முடியாமல்
விடை தா
இந்தக் கரும் கொங்கிறீட் கற்களிடமிருந்து
பூக்களின் வாசனைகளற்ற சிறு அறைகளிடமிருந்து
கருணையற்ற விழிகளிலிருந்து
விடை தா
பசுமையான வசந்த காலத்தை நான் கொண்டாட
என் இனிய கனவுகளைப் பாடித் திரிய
என்னுடைய சோகங்கள் கரைந்து போக
என்னுடைய பிரிவைப் பாட
எனக்கான ஒரு வெளியை உருவாக்க
விடை தா
என்னுடைய உடல் சிதைய முன்
என்னைக் கொண்டாட
என் உடலைக் கொண்டாட
விடை தா
ஏதாவது ஓர் அழைப்பு
ஏதாவது ஒரு புறக்கணிப்பு
ஏற்படுத்தும் பிரளயங்களை
உணர மறுக்கும் ஆன்மாவை
உணர விடை தா
காலாற நான் நடந்து
வருடங்கள் ஆயிற்று
அழகாக சிரித்து
வருடங்கள் ஆயிற்று
கசப்பில் விரியும் என் உதட்டிலிருந்து
விடை தா
அழகாக
ஆத்மார்த்தமான ஓர் வாழ்வை உருவாக்க
விடை தா
இன்று முடிகிறது
நாளை அதே இடத்தில்
பத்திரிகை உடனும்
தேனீர் உடனும்
மறுபடியும் சந்திப்போம்
மறுபடியும் புதிதாய் உரையாடத் தொடங்குவோம்
அங்கிருந்து
முடிவடையாத ஒரு புள்ளியை நீயும்
அர்த்தமற்றதான ஒரு கேள்வியை நானும்
பொதுவான சம்பாசணையாய்
விவாதித்துக் கொண்ருப்போம்
மையப் படுத்தப் பட்டிருக்கும் ஓர் ஜோடியால்
வாழ்க்கை அர்த்தப்பட்டிருப்பதாய் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்
நமக்குள் நிகழ்ந்துகொண்டிருக்கும் வெறுமையின் கொடிய நிழலை
சந்திக்க விரும்பாத பாசிசக் கரங்களை
தொட்டு விட விரும்பாத இரு காதலர்கள்
மூச்சு முட்டாத பிரிவை
உணராதவர்கள்
வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் எம்மைப் போலவே
தேனீரோடும் சம்பாசணைகளொடும்
நாளை என்ற ஒரு நாளோடும்