Thursday, May 3, 2007

தொலைந்து போகாத
சிறிய ஜாடிகள்
முன் எப்போதோ பரிசளிக்கப்பட்டவை
உடைந்து போகாது பத்திரப்படுத்தி பத்திரப்படுத்தி
நீண்ட நாட்களாய் உயிர்த்திருக்கிறது
நினைவுப் பரிசு
எதன் பொருட்டு
எதன் ஞாபகாரத்தமாய் என்பதெல்லாம் புரியாது
நீண்ட நாட்களாய் இருக்கிறது
யாருடையது என்பதறியாது
யாரும் கோராத சிறிய பரிசுப் பொருள்.
என் பிறப்பிற்க்கு முன்னதான
எனக்குப் பரிச்சயமில்லா யாரோ ஒருவரின்
பரிசை என் வீடு தாங்கிக் கொண்டிருக்கிறது.
எவருக்கோ அளிகக்கப்பட்ட அபரிதமான அன்பை
பாதுகாக்கும் பொறுப்பு என்னுடையது.
எங்கெல்லாமோ வருகிறது
என்னுடையது போல
நிச்சயமற்ற ஏதோ ஒன்றை சுமந்து கொண்டிருக்கிறேன்
எப்போதாவது உரித்துள்ளவரிடம் சேர்ப்பேன் என.
நடுநயமாய் இருந்து கொண்டிருக்கும் சிறிய பொருளை
ஒரு அன்ரிக் பொருளைப் போல பாரத்துக் கொண்டிருக்கிறார்கள்
அதற்கான விலையை தீர்மானித்துக் கொண்டிருக்கிறார்கள்.
யாருடைய எதையோ திருடிய சிறுமியைப் போல
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
என்னுடையதற்றதான பொருளை

1/21/07,11:41 PM

Tuesday, May 1, 2007

எங்கு தொலைந்தது
என்னுடைய பிரியங்கள்
மெல்லிய கம்பளிப் பூச்சியின்
மெதுமையாய் என்னை தடவிப் போகிறது
உன் நினைவு

எது குறித்தும் குறைபடாது
எது குறித்தும் சலிப்படையாது
எந்த எதிர்பார்ப்புமின்றி கடக்கிறது
நாட்கள்

கரகரத்த குரலில் நீ பாடுகிற
பாடலைக் காட்டிலும் இனிமையானதா
நீயற்ற இந்த வசந்தம்

வந்துவிடு சஷி

1/10/07 10:59 PM

சிறுமிக்கு...















1.
இடுப்பைப் பிடித்தபடி தூங்கிப் போகும் சிறுபெண்
என்னுடைய காதலை அது உண்டு பண்ணும் அச்சத்தை
உணர்துகிறது அருகாமை
உனக்கு மட்டுமாய் நான் இல்லாதிருப்பதால்
என் இடைபற்றி தூங்கமுடியாத காலங்களில்
நானும் வருத்தமடைவேன்
என் சிறுபெண்ணின் துயரத்தை எண்ணி
என்னிடையில் நீ வரமுடியாது என்பதாலும்
...

2.
எது குறித்தும் கவலைகள் இன்றி
படர்ந்திருக்கும் கைகள் அந்நியமாயிற்று
நீண்டு உருண்ட கைகள் எனக்கு பழக்கமற்றவை
அந்நியமானவை
இரவில் தனித்து உறங்கும் மெல்லிய
விரல்கள் ஞாபகத்தை எடுக்கிறது
தூக்கதில் விழித்துக் கொண்டு அழுகின்ற
ஆன்மாவை
அணைத்துக் கொள்கிறாய்
ஒரு சிறு குருவியின் ஏக்கம் கலந்த தனிமை
என் கட்டில் விரிப்புக்களை நனைக்கிறது

என் பிரிய குட்டியம்மா
யார் குறித்தான ஏக்கமும் நிலையானதல்ல என்கிற
கற்பிதத்தையே நானும் உன்னிடம் சேர்ப்பிக்கிறேன்
என்னுடைய பரிசாய்....

3.
எது குறித்தும் கவலையற்று
அந்நியமாகிப் போன உன்னை
முத்தமிடுகிறேன்
நீ இன்னும் என்னருகில் இருப்பதாய்
உன் வாசம் நாசியில் இருப்பதாய்
நினைத்துக் கொண்டிருக்கிறேன்
இருவருமாய் தனித்திருக்கும் போது
பெரிய வீதிகளை கடக்க காத்திருக்கும்
இரு சிறுமிகளைப் போல
மெளனம் நீடிக்கிறது
உன்னுடைய பார்வை
இடைவெளிகளை நிரம்பவே முடியாது என்கையில்
உன் முன் குற்றவாளியாய் மண்டுகிறேன்
நீ தான் என்னுடைய இரட்சகி
என்னுடைய பிரிய சாத்தான்
என்னை இரட்சித்து அன்பு செலுத்து
என் பாவங்களையெல்லாம் மறந்து
உன் சிரிப்பால் என்னை ஆசீர் வதி
உன்னுடைய பாரா முகத்தை கொண்டு
என்னுடைய இந்த வாழ்வை வாழமுடியாது-தாயே
எனனை இரட்சித்துக் கொள்...

1/13/07 7:57 PM
நான் ஒரு தேவடியாள் மகள்
முண்டை சிறுக்கி
வேசை
புலால் உண்பவள்
கடவுளாலும் சட்டங்களாலும்
கைவிடப்பட்டவள்
மலட்டு விதவை
யாருக்கும் உகந்தவள்
சாம்பலிலிருந்து துளிர்க்கும்
ஏதோ ஒன்றைப் போல
தவிர்க்க முடியாதவள்

1/13/07 11:10 PM

மெனபோஸ்

1.
மெனபோஸ் பற்றிய யோசித்திராத ஒரு பொழுதில் சாதாரணமாக கடந்து போகிற முத்துலிங்கத்தின் கதையில் அவர் மெனப்போசுக்கான தமிழாய் "முழுவிலக்கு" என்று உபயோகித்திருப்பதை படித்து நண்பிகளுக்கெல்லாம் மெனபோசுக்கான தமிழ் முழுவிலக்கு என்பதாகிவிட்டிருந்தது. அப்போது அது பற்றிய போதிய அறிவற்றிருந்ததால் அதைப்பற்றி ஏதும் யோசிக்கவில்லை ஆனால் அந்தச் சொல்முரண்டிக் கொண்டேயிருந்தது. மாத விலக்கு ஒவ்வொரு மாதமும் தள்ளி வைப்பதென்றால் முழுவிலக்கென்றால் முற்றாக தள்ளிவைப்பதென்பதாகாதா? முதல் சொல் போன்றே பின்னதும் சிக்கலுக்குரியதாகவே பட்டது. முன்னதை மாதப் போக்கு என்று வைத்தால் பின்னது முழுப் போக்கு என்றாகுமா?
2.
இரத்தம் போய்க் கொண்டேயிருக்கிறது. ஒரே வலியாய் இருக்கிறது. எப்ப இந்த சனியன் நிண்டு போகுமோ தெரியேல்லை -என்ற படியிருக்கும் அம்மா வயது பெண்களை கடக்கும் போதெல்லாம் அம்மாவைப் பற்றி நினைப்பதுண்டு.
முதல் முதலாக இரத்தத்தை கண்டு வெருண்டு அம்மாவைக் கட்டி அழுதபோது போலவே இரத்தத்தை காணுகிற ஒவ்வொரு பொழுதும் அம்மாவின் தழுவல் தேவையாய் இருக்கிறது. அது அம்மாவை நினைக்க வைக்கிறது. என்னுடைய அம்மாவுக்கு மெனப்போஸ் வந்திருக்குமா? அம்மா என்ன செய்கிறார் அது அவளை என்ன விதமான துன்பத்தில் தள்ளுகிறது என்கிற பிரிய துயரம் சூழ்ந்து விடுகிறது.

உடலில் ஏற்படுகிற சின்ன மாற்றத்திற்கான காரணங்களும் அம்மாவிடம் இருப்பதாய் அவளை தேடித் திரிகிற காலங்கள் கடந்து அவளிடமிருந்து வெகு தூரம் வந்தாகிவிட்ட போதும், அம்மாவின் மெனப்போஸ் என்னை பாதிக்கிறது. ஒவ்வொரு மாதமும் மாதப்போக்கோடான எனது பரிச்சயம் வலிமிகுந்தபோதும் அது தள்ளிப்போகிற போது எந்த வித காரணமுமின்றி எழுகிற பயம் போல அது கொண்டு வருகிற உணர்வு துயரானது. தினமும் காணுகிற நண்பரைப் போன்று அதன் இன்மை தனிமைப்படுத்துவதுண்டு. அந்த மணத்தை ஒருபோதும் விரும்பாத என்னால் அந்த மணமற்ற அந்த நாட்களை நினைக்க முடியவில்லை. நண்பியொருத்தி சொல்லுவது போல பெண்மையெல்லாம் காய்ந்து போன உணர்வை மெனப்போஸ் கொடுக்குமா? எனக்குள் அந்நியமாகி எங்கெல்லாமோ அலைந்து சோர்கையில் மாதப் போக்கு உண்டாக்குகிற உடல் வலியில் சுருண்டு கிடக்கையில் அம்மா உன்னுடைய மெனப்போஸ் பற்றிய நினைவு என்னுள் கடும் கலவரத்தை உண்டு பண்ணுகிறது. அப்பொழுதில் உன்னுடைய வயித்தில் என் முகம் அழுத்தி உன்னுடைய வலிகளை பகிர விரும்புவேன்.

முன்பொருமுறை சித்தியிடம் பயந்த குரலில் நிறையப் போகுது நின்று விடும் போலிருக்கிறது என்று நீ சொன்னதை எந்த எழுத்திலும் நான் வாசித்ததில்லை. அந்த குரல் பயத்தை ஏற்படுத்தியது. நான் நெருங்கிய போது பேச்சை மாற்றி ஒரொருவரை பார்த்தபடியிருந்த அந்தக் கண்களை நான் ஒரு போதும் பிரிந்ததில்லை. உன்னை உன் வலிகளை ஒரு பெண்ணாக எனினும் என்னால் உணரமுடியாது என்கிறாயா அம்மா?
செயற்கையாய் ஊசி ஏத்தி மாதப் போக்கை உண்டாக்குவார்களாமே என்று நண்பி சொல்லுகிற போது அப்படியா என்ற படியிருந்த போதும் அதைப்பற்றி என்ன என்பது போன்ற என் வயதுக்கு உரிய அலட்சியத்தை கடந்திருப்பதாகவே படுகிறது, அம்மாவைப்பற்றி யோசிக்கும் போதெல்லாம்.

இப்போதெல்லாம் கடவுள் கோயில் பக்தி என்று உன்னுடைய நாட்கள் நகர்கிறது. உன்னுடைய தனிமையை கடவுளும் பக்தியும் குறைப்பிக்கிறதா அல்லது உன்னுடைய பயத்தை இறைமையாய் உணர்கிறாயா? ஏதேதோ நினைத்துக் கொண்டு உன்னிடம் வந்தால் நீ எனக்கு மிக தூரமாகி நிக்கிறாய், எனக்கென்னவோ நேற்றுத்தான் உன் கர்ப்பத்தில் இருந்து பிறந்தது போல இருக்கிறது உன் ஸ்பர்சம்.

2/26/07 7:47 PM