மெனபோஸ் பற்றிய யோசித்திராத ஒரு பொழுதில் சாதாரணமாக கடந்து போகிற முத்துலிங்கத்தின் கதையில் அவர் மெனப்போசுக்கான தமிழாய் "முழுவிலக்கு" என்று உபயோகித்திருப்பதை படித்து நண்பிகளுக்கெல்லாம் மெனபோசுக்கான தமிழ் முழுவிலக்கு என்பதாகிவிட்டிருந்தது. அப்போது அது பற்றிய போதிய அறிவற்றிருந்ததால் அதைப்பற்றி ஏதும் யோசிக்கவில்லை ஆனால் அந்தச் சொல்முரண்டிக் கொண்டேயிருந்தது. மாத விலக்கு ஒவ்வொரு மாதமும் தள்ளி வைப்பதென்றால் முழுவிலக்கென்றால் முற்றாக தள்ளிவைப்பதென்பதாகாதா? முதல் சொல் போன்றே பின்னதும் சிக்கலுக்குரியதாகவே பட்டது. முன்னதை மாதப் போக்கு என்று வைத்தால் பின்னது முழுப் போக்கு என்றாகுமா?
2.
இரத்தம் போய்க் கொண்டேயிருக்கிறது. ஒரே வலியாய் இருக்கிறது. எப்ப இந்த சனியன் நிண்டு போகுமோ தெரியேல்லை -என்ற படியிருக்கும் அம்மா வயது பெண்களை கடக்கும் போதெல்லாம் அம்மாவைப் பற்றி நினைப்பதுண்டு.
முதல் முதலாக இரத்தத்தை கண்டு வெருண்டு அம்மாவைக் கட்டி அழுதபோது போலவே இரத்தத்தை காணுகிற ஒவ்வொரு பொழுதும் அம்மாவின் தழுவல் தேவையாய் இருக்கிறது. அது அம்மாவை நினைக்க வைக்கிறது. என்னுடைய அம்மாவுக்கு மெனப்போஸ் வந்திருக்குமா? அம்மா என்ன செய்கிறார் அது அவளை என்ன விதமான துன்பத்தில் தள்ளுகிறது என்கிற பிரிய துயரம் சூழ்ந்து விடுகிறது.
உடலில் ஏற்படுகிற சின்ன மாற்றத்திற்கான காரணங்களும் அம்மாவிடம் இருப்பதாய் அவளை தேடித் திரிகிற காலங்கள் கடந்து அவளிடமிருந்து வெகு தூரம் வந்தாகிவிட்ட போதும், அம்மாவின் மெனப்போஸ் என்னை பாதிக்கிறது. ஒவ்வொரு மாதமும் மாதப்போக்கோடான எனது பரிச்சயம் வலிமிகுந்தபோதும் அது தள்ளிப்போகிற போது எந்த வித காரணமுமின்றி எழுகிற பயம் போல அது கொண்டு வருகிற உணர்வு துயரானது. தினமும் காணுகிற நண்பரைப் போன்று அதன் இன்மை தனிமைப்படுத்துவதுண்டு. அந்த மணத்தை ஒருபோதும் விரும்பாத என்னால் அந்த மணமற்ற அந்த நாட்களை நினைக்க முடியவில்லை. நண்பியொருத்தி சொல்லுவது போல பெண்மையெல்லாம் காய்ந்து போன உணர்வை மெனப்போஸ் கொடுக்குமா? எனக்குள் அந்நியமாகி எங்கெல்லாமோ அலைந்து சோர்கையில் மாதப் போக்கு உண்டாக்குகிற உடல் வலியில் சுருண்டு கிடக்கையில் அம்மா உன்னுடைய மெனப்போஸ் பற்றிய நினைவு என்னுள் கடும் கலவரத்தை உண்டு பண்ணுகிறது. அப்பொழுதில் உன்னுடைய வயித்தில் என் முகம் அழுத்தி உன்னுடைய வலிகளை பகிர விரும்புவேன்.
முன்பொருமுறை சித்தியிடம் பயந்த குரலில் நிறையப் போகுது நின்று விடும் போலிருக்கிறது என்று நீ சொன்னதை எந்த எழுத்திலும் நான் வாசித்ததில்லை. அந்த குரல் பயத்தை ஏற்படுத்தியது. நான் நெருங்கிய போது பேச்சை மாற்றி ஒரொருவரை பார்த்தபடியிருந்த அந்தக் கண்களை நான் ஒரு போதும் பிரிந்ததில்லை. உன்னை உன் வலிகளை ஒரு பெண்ணாக எனினும் என்னால் உணரமுடியாது என்கிறாயா அம்மா?
செயற்கையாய் ஊசி ஏத்தி மாதப் போக்கை உண்டாக்குவார்களாமே என்று நண்பி சொல்லுகிற போது அப்படியா என்ற படியிருந்த போதும் அதைப்பற்றி என்ன என்பது போன்ற என் வயதுக்கு உரிய அலட்சியத்தை கடந்திருப்பதாகவே படுகிறது, அம்மாவைப்பற்றி யோசிக்கும் போதெல்லாம்.
இப்போதெல்லாம் கடவுள் கோயில் பக்தி என்று உன்னுடைய நாட்கள் நகர்கிறது. உன்னுடைய தனிமையை கடவுளும் பக்தியும் குறைப்பிக்கிறதா அல்லது உன்னுடைய பயத்தை இறைமையாய் உணர்கிறாயா? ஏதேதோ நினைத்துக் கொண்டு உன்னிடம் வந்தால் நீ எனக்கு மிக தூரமாகி நிக்கிறாய், எனக்கென்னவோ நேற்றுத்தான் உன் கர்ப்பத்தில் இருந்து பிறந்தது போல இருக்கிறது உன் ஸ்பர்சம்.
2/26/07 7:47 PM
5 comments:
periodற்கு மாதவிலக்கு என்று கூறித்திரிந்ததை, இரத்தப்பெருக்கு/உதிரப்பெருக்கு என்று கூறுவதுதான் பொருத்தமானது என்று தோழியொருவர் பின்னாட்களில் திருத்தியிருந்தார்.
.....
மற்றும் ஒரு பெண்ணால் இவ்வாறான விடயங்களில் நெருங்கக்கூடியவளவுக்கு அம்மாக்களோடு ஆண்களால் கதைக்க முடிவதில்லை.அதற்கு எனக்குள் இருக்கும் மனத்தடையும் ஒரு காரணமாயிருக்கலாம். இவ்வாறான உதிரப்பெருக்கு நாட்களில் நெடுந்தூரம் அம்மாவோடு அகதியாய் அலைந்து திரிந்து நாட்களும், அம்மா -எனக்கு விளங்காது- சாடைமாடையாய் பிற தன் வயதொத்த பெண்களுடன் -இன்று இத்தனையாம் நாள்/வலி அப்படியென்று-பேசித்திரிந்ததும் நினைவில் அலைகிறது.
......
தொடர்ந்து உரையாடுங்கள்.
அன்புடன்,
டிசே
வலியின் வன்மை.
என்ன சொல்வதென்று தெரியவில்லை அந்தாரா.
சில சமயங்களில் எத்தனையோ விதமான உணர்வுகளும் அதையொட்டிய கேள்விகளும் வரும்.
யாருடனும் அது பற்றிப் பேசாமல் எமக்குள்ளேயே அடிக்கடி எழுந்து அடங்கிப் போகும் இவைகளை நீங்கள் பேச முனைந்திருப்பதில் சந்தோசம்.
எமக்காவது பரவாயில்லை என்று சொல்லலாம். எமது தனிப்பட்ட பல கதைகளை எமது வெளிநாட்டுத் தோழியரோடாவது பேசிக் கொள்வோம். எமது அம்மாமார் அப்படியெல்லாம் பேசியிருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.
அகதியாகப் பெண்கள் மரங்களின் கீழ் இருப்பதைப் பாhக்கும் போதும் பல நாட்கள் அலைந்தார்கள் என்று கேள்விப் படும் போதும்
டிசே குறிப்பிட்ட அந்த வலியையும் விட அந்தப் பொழுதுகளில் தம்மை எப்படிச் சுத்தப் படுத்தியிருப்பார்கள் என்ற கேள்வி கவலையோடு எழும்.
//http://blogintamil.blogspot.com/2007/05/blog-post_08.html//
இங்கே உங்களை பத்தி மங்கை அக்கா எழுதியிருக்காங்க.
சும்மா என்ன எழுதியிருக்கீங்கன்னு பாக்க வந்தேன், ஆனா பதிவையும் பின்னூட்டத்தையும் படிச்சு எதுவும் சொல்ல முடியல. தொடந்து எழுதுங்க.
சென்ஷி
அந்தாரா
என்னுடன் பாடசாலiயில் படித்த நண்பிகள் பரிட்சைக்கு வந்து அவஸ்த்தைபட்டதும் அதை ஆண் ஆசிரியடம் சொல்ல முடியாமல் தவித்ததும் அதை என்நண்பர்களுடன் நானும் சேர்நது பகிடிபண்ணியதும் எனக்கு என்மிதெ அரவருப்பை உண்டபண்ணுகிறது
சத்தியன்
Post a Comment