Tuesday, February 19, 2008

தேனீர் காலியாகிக் கொண்டிருக்கிறது
சிரித்துக் கொண்டும் விவாதித்துக் கொண்டும்
காலியாக்கிக் கொண்டிருக்கிறோம்
தாண்டமுடியாத கண்டங்களை
விடைபெற விரும்பாத கணங்களை
அர்த்தமற்றதான காத்திருப்புக்களை
தேனீரோடு கடந்துகொண்டிருக்கிறோம்
ஏதோ ஒரு காலடியோசை
தொலைபேசி அழைப்பு
வாகனத்தின் இரைச்சல்
இப்படி ஏதாவது ஒன்று
இலகுவில் நுழைந்து விடுகிறது
நமக்கிடையே நிகழ்ந்து கொண்டிருக்கும்
உரையாடல்களுள்
நீண்ட நெடும் பெருமூச்சுக்களை
பிரம்மாண்டமான பெரும் இடைவெளிகளை
சம்பாசணையில் தொலைத்துவிட முயலும்
இந்த உரையாடல்கள்
தேநீரோடு காலியாகி விடுகிறது
மீண்டும் இடைவெளி சூழ்ந்துவிடு்கிறது.
பத்திரிகையில் ஒரு கண்ணும்
தொலைபேசியில் மறு கண்ணும்
சாளரத்தில் ஒன்றென்று
உடலெங்கும் பரவிப் படர்கின்றன
பல கண்கள்
எம்மை மீட்கும் ஒரு பொழுதிற்காய்
காத்திருக்கும் பல கண்கள்
தன்னை கண்டடைய முயலும் ஓர் ஆன்மா
நாலா பக்கமும் கற்குகைகளாய்
சந்தடிமிகு இரைச்சல்களுள்
தனக்கே உரியதான உலகை வேண்டி
தவம் இருக்கிறது
விடுபட விரும்பும்
எல்லா சங்கிலிகளில் இருந்தும்
இறுக்கமான ஒரு கயிறு அழுத்திக் கொண்டிருக்கிறது
விடுபட முடியாமல்
விடை தா
இந்தக் கரும் கொங்கிறீட் கற்களிடமிருந்து
பூக்களின் வாசனைகளற்ற சிறு அறைகளிடமிருந்து
கருணையற்ற விழிகளிலிருந்து
விடை தா
பசுமையான வசந்த காலத்தை நான் கொண்டாட
என் இனிய கனவுகளைப் பாடித் திரிய
என்னுடைய சோகங்கள் கரைந்து போக
என்னுடைய பிரிவைப் பாட
எனக்கான ஒரு வெளியை உருவாக்க
விடை தா
என்னுடைய உடல் சிதைய முன்
என்னைக் கொண்டாட
என் உடலைக் கொண்டாட
விடை தா
ஏதாவது ஓர் அழைப்பு
ஏதாவது ஒரு புறக்கணிப்பு
ஏற்படுத்தும் பிரளயங்களை
உணர மறுக்கும் ஆன்மாவை
உணர விடை தா
காலாற நான் நடந்து
வருடங்கள் ஆயிற்று
அழகாக சிரித்து
வருடங்கள் ஆயிற்று
கசப்பில் விரியும் என் உதட்டிலிருந்து
விடை தா
அழகாக
ஆத்மார்த்தமான ஓர் வாழ்வை உருவாக்க
விடை தா
இன்று முடிகிறது
நாளை அதே இடத்தில்
பத்திரிகை உடனும்
தேனீர் உடனும்
மறுபடியும் சந்திப்போம்
மறுபடியும் புதிதாய் உரையாடத் தொடங்குவோம்
அங்கிருந்து
முடிவடையாத ஒரு புள்ளியை நீயும்
அர்த்தமற்றதான ஒரு கேள்வியை நானும்
பொதுவான சம்பாசணையாய்
விவாதித்துக் கொண்ருப்போம்
மையப் படுத்தப் பட்டிருக்கும் ஓர் ஜோடியால்
வாழ்க்கை அர்த்தப்பட்டிருப்பதாய் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்
நமக்குள் நிகழ்ந்துகொண்டிருக்கும் வெறுமையின் கொடிய நிழலை
சந்திக்க விரும்பாத பாசிசக் கரங்களை
தொட்டு விட விரும்பாத இரு காதலர்கள்
மூச்சு முட்டாத பிரிவை
உணராதவர்கள்
வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் எம்மைப் போலவே
தேனீரோடும் சம்பாசணைகளொடும்
நாளை என்ற ஒரு நாளோடும்

1 comments:

said...

நன்றாகவிருக்கிறது; இன்னும் கொஞ்சம் சுருக்கியிருக்கலாம் போலவும் தோன்றுகின்றது.