Thursday, April 24, 2008

காமத்தைப் பேசுதல்...




எனது உடல் பாவத்துக்குரியது
நீங்கள் புனிதமாய் சொல்லுகின்ற
எல்லாவற்றையும் நிராகரிப்பது
உங்கள் மொழியில் நான் பெண்ணுக்குரிய
குணாம்சங்களைத் துறந்திருந்தேன்
இதை எழுதுவதூடாக நான் பெண் என்பதையே
துறக்க முனைகிறேன். என்னூடாக நான் கடந்தவள்களின், என்னுடைய உடலைப் பற்றிப் பேச முனைகிறேன். அது யாரைப்பற்றிப் பேசிய போதும் அதிலிருக்கின்ற எல்லா உணர்வும் எல்லா வலியும் என்னுடையதாகவே ஆகிவிடுகிறது.

முதல் முதலாக ஓரு ஆண் முத்தமிட்ட போது எழுகின்ற உடல் சார்ந்த புனிதம் சார்ந்த அச்சத்தைப் போல உடல் பற்றிப் பேசும் போதெல்லாம் நல்ல உடல் - புனிதமான உடல் போன்ற பிரயோகங்களும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு முறை பிரியமான பெண் ஒருத்தி சிறுமியாய் தன்னுள் திணிக்கப்பட்ட குறியைப் பற்றி அதன் அருவருப்புணர்வு பற்றிக் சொல்லிக் கொண்டிருந்தவள் உடைந்து போய் தன்னை ஒருவருக்கும் பிடிப்பதில்லை ஏனெனில் நான் சுத்தமற்றவள் என்றாள். அன்று அவளுடைய அழுகையை விடவும் வதையானதாய் என்னை தொடர்ந்து கொண்டே இருந்த வசனம் அழுக்கானவள் என்கின்ற அவளுடைய துயரமே. தினமும் நீ நல்ல பிள்ளையல்லா என்று சொல்லிச் சொல்லித் திணிக்கப்பட்ட புனிதங்கள் சாக்காடையாய் உள்ளே ஓடிக் கொண்டிருக்கிறது. ஆறு வயதில் தான் என்கின்ற எந்த தனித்துவமுமற்ற ஒரு சிறுமியிடம் திணிக்கப்படுகின்ற குறி பாவங்களைச் சுமக்கவில்லை, சிறுமியாய் அதிகாரத்துக்கு முன்னால் அடங்கிப் போன குழந்தை அழுக்கானவளாய் வளர்ந்து நிக்கிறாள். அறிவும் அன்பும் நிறைந்த அந்தக் குழந்தையிடமிருந்து பறிக்கப்பட்டது குழந்தைமையும் உடல் பற்றிய ஆசைகளும் மட்டும் தானா? அவளிடம் இருந்து திருடப் பட்டது தன்னம்பிக்கையும், மற்றவர்களிடம் இப்படி ஒன்று எனக்கு நடந்தது என்று பகிர்வதற்கான வெளியும் தான். என் பிரியத்துக்குரிய அவளைப் போல தனக்கு மட்டும் தான் இது நடந்தது ஏனெனின் தான் நல்ல பிள்ளை இல்லை என நம்புகிற அவளைப் போல குழந்தைகளிடம் ஏதோ ஒரு போதில் இதை ஒருமுறையாவது எல்லாப் பெண்களும் எதிர்கொண்டிருப்பார்கள் என்று பகிர தடையாய் இருப்பது என்ன? புனிதமான உடல் என்கின்ற கட்டமைப்பா? தன்னுடைய பெண் உடலுள் இருக்கின்ற அந்த புனித புள்ளியை தைக்க முடியாதா அல்லது ஆண் குறியை வெட்டி தட்டையாக்கினால் என்ன என்கின்ற குழந்தையிடம் உன்னுடைய உடல், உனக்கான காமம் என்கின்ற புள்ளிகளை உருவாக்கி கொடுப்பதற்கான வெளிகளை அடைத்து வைத்திருப்பது எது. இந்தப் புள்ளியிலிருந்து தான் The vagina monologues என்கின்ற படைப்பு முக்கியமாய்ப் படுகிறது. உலகெங்கும் பயணம் செய்து பெண்களிடம் தமது பெண் குறியைப் பற்றி பேச வைத்திருக்கின்றார். தன் உடலின் முக்கியமான உறுப்பொன்றைப் பற்றி முதல் முதலாய் உணர்ந்தவர்கள் போல பேச ஆரம்பிக்கிறார்கள். புதர்களுள்ளிருக்கின்ற ஒன்றை கண்டடைகின்ற மகிழ்வுடன் தமது உறுப்பைப் பற்றிய அவர்களுடைய கண்டடைதல்கள் எல்லாப் பெண்களுக்கும் பொதுவானவை. தன்னுடைய பாலுறுப்பைக் கண்டடைவதூடாக தமது காமத்தைக் கண்டடைகின்றார்கள். பொதுவாக காமம் என்பது ஆண்களுக்கானது இது பெண்களைப் பற்றி அவர்களுடைய விருப்பு வெறுப்பைப் பற்றிப் பேசுவதில்லை. தெருவில் நிக்கின்ற ஆண்களை யாரும் புணர்தலுக்கான உயிரியாய்ப் பார்ப்பதில்லை. ஒருமுறை நண்பர் ஒருவர் தன்னுடைய நண்பனில் ஒருவன் சரஸ்வதி பக்தன், சரஸ்வதியே அவனுடைய ------ என்று சொன்ன போதும், இன்று காமத்தைப் பற்றி தேடிவருகின்ற குறிச்சொற்களை கணனியில் பார்க்கின்ற போதும்
அம்மா அக்கா தங்கை அண்ணி என்கின்ற புனித புள்ளிகளை போற்றிப் பாதுகாக்கின்ற அதேவேளை, மறைமுகமாய், அவர்களைப் பற்றிய காமக் கதைகளை வாசிப்பது என்கின்ற அடுத்த புள்ளியைப் பார்க்கையில் புனிதமாய் வைத்திருக்கின்ற இந்த உறவு நிலைகள் ஆச்சர்யப்படுத்துகிறது. இதனூடாக புனிதமாய் கட்டிவைத்திருக்கின்ற எல்லாவற்றையும் உரித்துப் பாக்கின்ற மனோநிலையும் வளர்கின்றதில்லையா?
ஒரு முறை ஊருக்குப் போயிருந்த போது நான் பிறந்த வளர்ந்த தெருவில் பஸ்சில் பிரயாணம் செய்த போது ஒரு தாய் குழுந்தைக்கு துணியால் மூடியபடி பால் கொடுத்துக் கொண்டிருந்தார். பின்னர் அவர் தூங்கியிருந்தார். அந்த துணி நழுவியிருந்தது குழந்தை பால் குடித்துக் கொண்டிருந்தது. நான் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தேன். நின்றவர்கள் யாவரும் ஆண்களாய் இருந்ததால் மூடுவதா விடுவதா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். என் கைகள் துணியை எடுத்து கொடுக்கும் கதாநாயகன் போல உணர்சிவசப்பட்டது; கடைசியில் அப்படியே விட்டு விடுவது என்று விட்டுவிட்டேன். குழந்தைக்கு பால் ஊட்டுவது கூட ஒரு ஆணைத் தூண்டுகின்ற விடயமாய் மறைக்க வேண்டியதாய் எனக்குப் படவில்லை. மேலைத்தேய நாடுகளில் வாழ ஆரம்பித்த பிற்பாடு பஸ் இருக்கைகளுக்கு மேலே "பொதுவில் பெண்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுதல் குற்றமல்ல" என்கிற சொற் தொடர்களைப் பார்க்கின்ற போது அப்படி பொது இடத்தில் குழந்தைக்கு பால் கொடுக்கின்ற நிலை வரவேண்டும் என்று தான் தோன்றுகிறது. இன்னொருமுறை தன்னுடைய மனைவியைப் பற்றி சொல்லிய நண்பரின் நண்பர் அவள் எல்லாவற்றையும் விளங்கிக் கொண்டவள் எல்லாவற்றையும் பேசுகிற பெண் என்று நினைத்திருந்தேன் ஆனால் அவளால் வெளிச்சத்தில் உடலுறவு கொள்ள முடியவில்லை என்று சொன்ன போது மிகவும் சங்கடமாய் இருந்தது. பேசுகின்ற பெண்கள் உடல்சார்ந்து வெளிப்படையாய் இருப்பார்கள் என்கின்ற இவர்களுடைய நினைப்பும் அவர்களைப் பற்றி விளங்காத பேச்சும் அதை அவளற்ற வெளிகளில் பேசி தண்ணியடித்தலை சுவாரசியம் ஆக்குவதும் பெண் உடல் பற்றி எவ்வகையான புரிதலைக் கொண்டு வரும்? ஆண்கள் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவளுடைய கூச்சம் அவளுடையது மட்டுமானதா? பெண்கள் தன்னுடைய உடலை நிர்வாணமாய் எத்தனை தடவை பார்ப்பார்கள் என்பதே புதிரான விடயம் (குளிக்கின்ற போது தவிர்த்து). நிமிடத்துக்கு நிமிடம் புண்டை என்று சொல்லுகின்ற நண்பர்கள் ஒரு முறை நாங்கள் ஏய் கொட்டை உன்ரை உறுப்பைச் சொல்லிக் கதையன் என்ற போது முகத்தில் தென்பட்ட அதிர்ச்சியிலிருந்து அவர்கள் காலத்துக்கும் மீள மாட்டார்கள் என்று தோன்றியது. என்னுடைய சிறு நண்பிகளிடம் சொல்லிக் கொடுப்பதும் அது தான். உன்னுடைய எந்த உறுப்பும் கெட்ட வார்த்தை கிடையாது அதை கெட்ட வார்த்தையாய் சொல்லுகின்ற போது நீ அவர்களுடையதை சொல்லு அது தான் உன்னுடைய ஆயுதம்.
ஒரு முறை சகோதரனுடன் பயணித்த போது ஒரு ஆண் எங்களுடன் கதைக்க வெளிக்கிட்ட போது அவன் கையை நீட்டி விட்டான் அன்று அவர் கற்றுக் கொண்டது எம்மிடமிருந்து, எமக்கான எதிர்ப்பை அல்லது விருப்பத்தை நாங்கள் பார்த்துக் கொள்வோம் நீ எமக்காய் யாருடனும் சண்டை போட வேண்டியதில்லை. நாங்கள் கேட்டோம் என்றால் வா நண்பனோ, காதலனோ, கணவனோ அந்த எவனோ எங்களுக்காக யாருடனும் சண்டை போடவேண்டியதில்லை ஏனெனில் நாங்கள் எங்களை பாதுகாக்கத் தெரிந்தவர்களாய் வளர்ந்திருந்தோம். அப்படியாக வளர்வதற்கான சுதந்திரத்தை வெளிகளை உருவாக்குவதே உதவுதலின் முக்கிய புள்ளியாய் இருக்கும். அதைவிடுத்து யாருக்காகவும் யாருடைய ஆசைகளையும் விளங்காது சண்டை பிடித்தலும் உடலைப் பற்றிப் பேசாது விட்டு என்னுடைய மனைவிக்கு உடலுறவில் விருப்பமில்லை என்ன செய்தாலும் பேசாம இருக்குது என்பதும் இன்னும் இன்னும் பெண் பற்றிய புரிதலின்மையையே காட்டுகிறது. பெண்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினால் ஆண்கள் எல்லாம் தெரிந்தவர்களாய் நினைத்து விடுவார்கள் என நினைத்தும் மெளனமாய் இருக்கலாம் ஆகவே நம்மைப்பற்றி நம் உடலைப் பற்றி உணர்வுகளைப்பற்றி விருப்பங்களைப் பற்றிப் பேசிக் கொள்ளுவோம்; எந்த முன் அனுமானங்களுமின்றி பேச்சினூடே ஒரொருவரை புரிந்து கொள்ளுவோம்; அதிலிருந்து தான் பெண்ணின் காமத்தை அதனூடாக ஆண்-பெண் வெளிப்பாடுகளை உணர முடியும்.

2/15/08 -4:50 PM

4 comments:

said...

திருப்பிப் படிக்கிறபோது... அன்பின் கரிசனையைக் காட்டுற உனது எழுத்துப் துயர் கலந்த பிடிப்பைத் தருது...

said...

நேரமிருப்பின் இந்த சுட்டியைப் பார்க்கவும்.

http://blogintamil.blogspot.com/2008/05/blog-post_11.html

said...

அந்தாரா ,என்ன எழுதுவதென்று தெரியாத நிலை உனது எழுத்தில் என்னைப்பார்க்கிறேன் எதையென்று குறிப்பிட்டுச்சொல்லத்தேவையில்லை உன் எழுத்தில் எல்லாமே முக்கியமானது .ஒரு பெண்ணிடமிருந்து உண்மையாகவே வெளிவரும் அவளிடமிருந்து பறிக்கப்பட்ட பெண்மொழியின் ஆவேசத்தை பெண்மேல் சுமத்தப்பட்ட புனிதங்களின் உடைப்பை உனது எழுத்தில் காண்கிறேன் நீ நான் என்று சொல்வது உனக்கொன்றும் பிரச்சனையிருக்காது என்று நினைக்கிறேன் என்னால் உன்னை அவ்வளவுதூரம் உரிமையுடன் பார்க்க முடிகிறது மகிழ்ச்சியாக இருக்கு உன்பக்கம் பார்க்கக்கிடைத்ததது.
சகி றஞ்சினி

said...

அந்தாரா உன்னுடைய எழுத்து எனக்கு எந்தவித அதிர்சியையும் தரவில்லை ஏனெனில் நானும் உன்னைப்போல்p கலக உணர்வு கொண்டவனெ என் மொழியலும் ஆணாதிக்கம் இருக்கலாம் ஒருபோதும் ஆண் என்ற சிறப்புதகுதியை நான் கோரவில்லை
இன்னொன்று பாலியல் வறட்சி உச்சத்திலிருக்கும் எமது ஊரிலிரந்து எப்படி உன்னைப்போல் என்னால் பேசமுடியும் குறைந்தபட்சம் ஒரு பெண்ணுடலைக்கூட திரை காட்டும் விம்பம் தவிர்த்து நாம் கண்டதில்லையே வாழ்த்துக்கள் உங்கள் எழுத்து புதிய வெளிகளை உருவாக்கட்டும் நானும் அந்த வெளியில் அனுமதித்தால் நடக்கிறேன்

சத்யன்