Monday, April 16, 2007

தனிமையின் குரல்

1.
அந்தரங்க வெளியில்
ஊடுருவிக் கிடக்கும்
எழுத்தாளர்களின் குறி
என்னைநோக்கியிருப்பதாய்
விசித்திரமான ஒரு உணர்வு வந்து போகிறது
2.
தெளிவற்ற எழுத்துக்குள் சிக்கலாய்
வெறித்துக் கிடக்கின்ற உன்னை
நான் கண்டடைந்ததாய் நினைத்த போதும்
யாருடனும் பகிர முடியவில்லை.
3.
தெளிந்த நிலையில் இருக்கின்ற எவரையுமே
எனக்கு புரிந்து கொள்ள முடியாது போகிறது
தெளிவானதென்றால் என்ன
சுவடுகளைப் போல எதுவுமே தெளிந்தாய் இருந்ததில்லை
எனக்கு..
4.
சாப்பிட்டு விட்டுப் போ என்கிற அப்பாவை
கடந்து போகிற வெளியில் மறந்து போய்
என்னத்துக்காக கூப்பிட்டார் என்கிற அவஸ்தை வருகிறது
போகிற வெளிகளையெல்லாம் சபித்துக் கொண்டு

5.
யாருடைய வீடு என்பது கேள்வியாய் இருந்ததில்லை
அவளின் எல்லா குணங்களும் நிறைந்த இடம்
பேசுகின்ற ஜடம்
தங்கி விட்டுப் போகின்ற கூடு '
எனக்கு அம்மாவின் இடம்
இப்போது தான் புரிகிறது
அதற்க்கு சொந்தமானவர்களுக்கும்
அது வீடில்லை என்பது

4/10/07.